;
Athirady Tamil News

‘சனல் 4’ காணொளி: சர்ச்சையும் சந்தேகங்களும் ! (கட்டுரை)

0

இலங்கையில் வாழ்கின்ற எந்தவோர் இனக்குழுமத்துக்கும் மற்றைய சகோதர இனத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. சாதாரண மக்கள், இந்த நாட்டில் ஒற்றுமையுடன் நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போவதற்கே விரும்புகின்றனர்.

ஆனால், மக்களைப் பிரித்து ஆள்வதற்கான தேவையும் ஆள்வதற்காகவே பிரிக்கின்ற தேவையும் அரசியல் தரப்புகளுக்கு இருக்கின்றன. மக்களிடையே முரண்பாடுகளை தூண்டிவிட்டு, அதைச் சாதகமாக்கி தமது நலன்களை உறுதிசெய்து கொள்வதில், சில உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் குறியாய் இருக்கின்றன.

மறுபுறத்தில், அற்பத்தனமான காரணங்களுக்காக அல்லது முட்டாள்தனமான சித்தாந்தங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மிலேச்சத்தனமான காரியங்களைச் செய்து விட்டு, ஓடிஒளிந்து கொள்கின்ற பயங்கரவாத, அடிப்படைவாத, இனவாத, அரசியல் குழுக்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் நடந்த, நடக்கின்ற, சிறிய – பெரிய முக்கிய சம்பவங்களுக்குப் பின்னால், வெளியில் தெரியாத ஒரு மறைமுக காரணம், மறைகரம் இருக்கின்றது. ஆனால், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றது.

அந்த வகையில், 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலும் அவ்வகை சார்ந்ததே! இதற்குப் பின்னால், வேறு ஒரு நிகழ்ச்சி நிரல், சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் அன்றே சொன்னது.

முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழ், சிங்கள சமூகத்தில் இருக்கின்ற நடுநிலை அவதானிகளும் இதையே கூறினர். அதுமட்டுமன்றி, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூட, “இதற்குப் பின்னால் ஒரு சதித்திட்டம் இருக்கின்றது. அதைக் கண்டறிய வேண்டும்” என்று அப்போதே சொன்னார்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்; பலர் ஊனமுற்றனர். இவர்களில் வெளிநாட்டவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என்போரும் அடங்குகின்றனர். அதுமட்டுமன்றி, தாக்குதல் இலக்காக தமிழர்கள் அதிகம் கூடும் கத்தோலிக்க தேவாலயங்களும் வெளிநாட்டவர்கள் வரும் இடமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் இருந்தன.

எனவேதான், முஸ்லிம் சமூகம் “இதனை நாங்கள் செய்யவில்லை” என்று மன்றாட்டமாகக் கூறியது. ஆனால், அரசாங்கமோ வெளிநாடுகளோ பொறுப்புவாய்ந்த அதிகாரிகளோ அதனைக் கண்டு கொள்ளவில்லை. சஹ்ரான் என்ற பயங்கரவாத கும்பலை காரணமாகக் காட்டி, முழுப் பழியும் முஸ்லிம் சமூகத்தின் மீது போடப்பட்டது. அதுதான் அவர்களது திட்டமாகவும் தேவையாகவும் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது.

ஏனெனில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது சாதாரண மக்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஆட்சியாளர்களும் பல அரசியல்வாதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார்கள். எனவே, அவர்கள் தங்களைத் தாங்களே குற்றவாளிகள் என கண்டுபிடிக்க முன்வரவே மாட்டார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை; முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை. விசாரணைக் குழுக்களோடும் அறிக்கைகளோடும் கிட்டத்தட்ட கோப்புகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில், நான்கு வருடங்கள் கழித்து, ‘சனல் 4’ தொலைக்காட்சி ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

ஏற்கெனவே, 2011 இல் ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற தலைப்பில் காணொளியை பிரித்தானியாவின் ‘சனல் 4’ ஒளிபரப்பியிருந்தது. இது யுத்தக் குற்றங்கள் பற்றிய பெரும் சர்ச்சைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்தது. இன்றும் இலங்கை அரசாங்கம் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இதே தொலைக்காட்சி, இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு சற்றும் குறைவில்லாத அதிர்வலைகளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த ஆவணப் படமும் இலங்கையிலும் சர்வதேச அரங்கிலும் ஏற்படுத்தியுள்ளது.

‘பிள்ளையான்’ எனப்படும் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊடகத் தொடர்பாளராகவும் அவரது வலது கரமாகவும் செயற்பட்ட ‘ஆசாத் மௌலானா’ எனும் மொஹமட் மிஹ்லார் மொஹமட் அன்ஸிர் என்பவரே, இந்தக் காணொளியில் பிரதான சாட்சியாளராக தோன்றுகின்றார்.

இதுதவிர, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவின் உயரதிகாரி மற்றும் இன்னுமொரு மேலதிகாரி உள்ளிட்டோர் ஏனைய பிரத்தியேக வாக்குமூலங்களை ‘சனல் 4’ இற்கு வழங்கியுள்ளளர். இத்தாக்குதலுக்குப் பின்னால், ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது என்று 2019 இலேயே எழுந்த ஊகங்கள், இப்போது மீண்டும் கிளறிவிடப்பட்டுள்ளன.

சுருங்கக் கூறின், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, அதிகாரத்துக்கு வருவதற்காக ராஜபக்‌ஷர்கள் இதைச் செய்வித்ததாகவும், சிறையில் இருந்த பிள்ளையான் இதை ஏற்பாடு செய்ததாகவும் ராஜபக்‌ஷர்களுக்கு நெருக்கமான புலனாய்வு பிரிவு உயரதிகாரி சுரேஷ் சாலே மற்றும் சஹ்ரான் கும்பலுக்கு இடையிலான சந்திப்பை தான் முன்னின்று ஒழுங்குசெய்ததாக அசாத் மௌலானா இதில் கூறியிருக்கின்றார்.

இதுதவிர ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் அவர் ‘சனல் 4’ காணொளியில் விவரிக்கின்றார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற பல கொலை, கடத்தல் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கும் தனக்கும் ராஜபக்‌ஷ தரப்புக்கும் இருந்த தொடர்புகள் பற்றி, அசாத் மௌலானா தகவல் வெளியிடும் இன்னுமொரு ஒலிப்பதிவும் வெளியாகி இருக்கின்றது.

‘சனல் 4’ காணொளியில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மறுத்துள்ளனர். “வழக்கமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறுகின்ற சோடிக்கப்பட்ட கதைகளைப் போல, அசாத்தும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக இதனை கூறுகின்றார். இது விசாரிக்கப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் எஸ். சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

அசாத் மௌலானாவின் இத்தகைய வாக்குமூலங்களை, சுரேஷ் சாலே, மறுத்துள்ளார். “அந்தக் காலப்பகுதியில் நான் இலங்கையில் இருக்கவில்லை” என்று அவர் விளக்கம் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, “இது பொய்கள் திணிக்கப்பட்ட ஒரு காணொளி” என விவரித்துள்ளார். “வழக்கமாக ‘சனல் 4’ செய்யும் வேலையின் தொடர்ச்சிதான் இது” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து உத்தியோகபூர்வமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், விசாரணை நடத்த தெரிவுக்குழு அமைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், இக்காணொளி பற்றிய வாதப் பிரதிவாதங்கள் மிகக் கிட்டிய காலத்தில் அடங்கிப் போவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

இக்குற்றச்சாட்டுகளை மறுப்பவர்கள் சொல்வது போல, அசாத் மௌலானா தனது புகலிடக் கோரிக்கைக்காக அல்லது வேறு வெகுமதிகளுக்காக இதனை கூறலாம். அல்லது இன்னுமொரு தேர்தலை முன்னிட்ட ஒரு நாடகமாக இது இருக்கலாம். இதற்குப் பின்னால் நீதி நிலைநாட்டுதல் என்ற நோக்கத்தை தவிர வேறு உள்நோக்கங்களும் இருக்கலாம்.

இதில், முழுமையான உண்மையோ அரைவாசி உண்மையோ இருக்கலாம். ஆனால், முற்றுமுழுதாக எல்லாம் சோடிக்கப்பட்டது என்று கூறி விட முடியாது. ஒரு சதவீத உண்மை இருந்தாலும் அது வெளிக்கொணரப்பட வேண்டும். ஏனெனில், இப்படியான பின்னணி ஒன்று இருக்கின்றது என்ற விடயம், 2019ஆம் ஆண்டிலேயே பேசப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது.

‘சனல் 4’ இல் வாக்குமூலம் அளித்துள்ள அசாத் மௌலானா, சமூக சிந்தனையாளரும் இல்லை; சுத்தவாளியும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த விவரங்களை எல்லாம் அவர் அறிந்திருந்தும், இப்போது தனக்கு ஒரு தேவை என வருகின்ற போதுதான் இவற்றை வெளிப்படுத்துகின்றார். எனவே, அவர் உட்பட சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து நபர்களும் விசாரிக்கப்படுதல் வேண்டும்.

‘சனல் 4’ என்பது எப்படியான ஓர் ஊடக நிறுவனமாக இருந்தாலும், காணொளியின் உண்மைத் தன்மை எதுவாக இருந்தாலும், அதை எடுத்த எடுப்பில் மறுதலித்து விட முடியாது. ஏனெனில், 2019இல் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல், ஒரு சர்வசாதாரணமான விடயமல்ல.

எனவே, இதில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அசாத் மௌலானா இப்போது கூறும் விடயங்களை, ஒரு துரும்பாக வைத்து விசாரித்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மட்டுமன்றி, பல கொலைகளின் சூத்திரதாரிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள்.

அதனூடாக, இந்தப் படுபாதக செயலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் அதிகாரத்தில் இருந்தாலும் அடங்கிப்போய் இருந்தாலும், குற்றவாளிகள் ஈவிரக்கம் இன்றி தண்டிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்.

அதைவிடுத்து, “இது பொய்யும் புரட்டும் சேர்த்து சொல்லப்படும் கட்டுக்கதை” என்று மேலோட்டமாக கூறிவிட்டு, கடந்து செல்ல முனைவது, சந்தேகங்களை இன்னும் வலுப்படுத்தவே உதவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.