நிபா வைரஸ் ; வரும்முன் காப்பதே சிறந்தது; ஆசிய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் By Editor-A Last updated Feb 4, 2026 0 Share இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில நாடுகளில் விமான நிலையங்களில் கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், நேபாளம், ஹொங்கொங் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள், வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் விமான நிலையங்களில் சுகாதார கண்காணிப்பை அதிகரித்துள்ளன. மேற்கு வங்காள மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இரண்டு தாதியர்களுக்கு, கடந்த டிசம்பர் மாத இறுதியில் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 196 பேர் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டில் நிபா வைரஸ் தொற்றால் ஐந்து பேர் உயிரிழந்ததற்குப் பின்னர், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் பதிவான முதல் தொற்றாக இது அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள போதிலும், பயணக் கட்டுப்பாடுகளோ அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளோ விதிக்கத் தேவையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலைப்பாடு நிபா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதற்கான அபாயம் குறைவாகவே காணப்படுவதாகவும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் நோய் பரவல் நிலைமையை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபா வைரஸ் என்றால் என்ன? நிபா வைரஸ் என்பது வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்றுநோயாகும். இந்த வைரஸ் தொற்றால் காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், சுவாசச் சிக்கல்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். வௌவால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமாகவும், அவற்றின் சிறுநீர் அல்லது எச்சம் கலந்த பதநீர், கள் போன்ற பானங்களை அருந்துவதன் மூலமாகவும் மனிதர்களுக்குத் தொற்று பரவுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த வைரஸ் எளிதில் பரவாது. ஆனால், பாதிக்கப்பட்டவருடன் நீண்ட நேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள் மற்றும் பாதிப்பு நிபா வைரஸ் தொற்றின் அடைகாலம் (Incubation period) 4 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். ஆரம்ப நிலையில் காய்ச்சல், தலைவலி, சுவாசக் குறைபாடு போன்றவை ஏற்படலாம். தொடர்ந்து மயக்கம், நனவில் மாற்றம், நிமோனியா போன்ற பாதிப்புகள் உருவாகலாம். சில சந்தர்ப்பங்களில் ஆபத்தான என்செபாலிடிஸ் (மூளை அழற்சி) ஏற்படக்கூடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 முதல் 75 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நோய்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட மருந்தோ இல்லை. கடந்த காலங்களில் நிபா வைரஸ் பரவல் நிபா வைரஸ் முதன்முறையாக 1998ஆம் ஆண்டு மலேசியாவில் பன்றி வளர்ப்பவர்களிடையே கண்டறியப்பட்டது. பின்னர் அது சிங்கப்பூருக்கும் பரவியது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட மலேசியாவின் சுங்கை நிபா கிராமத்தின் பெயரிலேயே வைரஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், வைரஸ் கட்டுப்பாட்டிற்காக இலட்சக்கணக்கான பன்றிகள் அழிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடைத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். 2001ஆம் ஆண்டிலிருந்து பங்களாதேஷில் 100க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2001 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் தொற்றுகள் பதிவாகின. 2018ஆம் ஆண்டு கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். 2023ஆம் ஆண்டு 6 பேர் பாதிக்கப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். நோய் பரவாமல் தடுப்பது எப்படி? நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்லுவதைத் தவிர்க்கவும் அல்லது பயணத்தை ஒத்திவைக்கவும் வௌவால்கள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் தரையில் விழுந்த, பழுதடைந்த பழங்களை உண்ணக் கூடாது கள், பதநீர் போன்ற திறந்த நிலையில் தயாரிக்கப்படும் பானங்களை தவிர்க்கவும் நோயாளிகளை பராமரிப்பவர்கள் முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் அணிய வேண்டும் கைகளை அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் நோயுற்ற அல்லது இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணக் கூடாது வீட்டு மற்றும் பண்ணை விலங்குகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக விலங்கு வைத்தியர்களை அணுக வேண்டும். Free Download WordPress ThemesDownload WordPress Themes FreeDownload WordPress Themes FreePremium WordPress Themes Downloadudemy course download free 0 Share