;
Athirady Tamil News

’முஸ்லிம் அமைச்சர்’ வெற்று வியாக்கியானங்கள்

0

மொஹமட் பாதுஷா

ஜனநாயகம், இன நல்லிணக்கம் பேசி ஆட்சிக்கு வந்தது மட்டுமன்றி, இன்று வரையும் அதே வழித்தடத்திலேயே பயணிப்பதான தோற்றப்பாட்டைக் கட்டமைக்க முனைகின்ற என்.பி.பி. அரசாங்கம், முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமல் இருப்பதை இன்று வரை நியாயப்படுத்தவே முனைகின்றது.

ஆரம்பத்தில் அமைச்சரவை நியமனம் மேற்கொள்ளப்பட்ட போது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமிக்க முடியாமல் போய்விட்டது. அது தற்செயலாக இடம்பெற்று விட்டது என்றால், அதனை அதற்கடுத்த கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்களின் போத சரிசெய்திருக்க வேண்டும்.

முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த சமூகமுமே ஆரம்பத்தில் இருந்து கூறி வருகின்றது.

முஸ்லிம் கட்சிகளில் அல்லது எஸ்.ஜே.பியில் உள்ள ஒரு எம்.பிக்கு அப்பதவி கிடைக்கப் போவதில்லை என்பது சிறுகுழந்தைக்கும் தெரியும். ஆகவே, ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காவது அப்பதவி கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த நிலைப்பாடாகும்.

இது ஜே.வி.பியும் என்.பி.பி.யும் செய்த பெரும் தவறு என்பதை, இதற்குப் பின்னாலுள்ள அரசியல் தெரிந்த ஆளும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களும் அறிவார்கள். ஆனால் ஆளும் கட்சியின் எம்.பிக்களும் ஆதரவாளர்களும், வழக்கமான ஆளும் கட்சிகளின் ‘ஜால்ராக்கள்’ போலவே செயற்படுவது பெரும் அபத்தமாக உள்ளது.

அமைச்சர் பதவியைச் சுமக்கக் கூடிய அனுபவம் முஸ்லிம் எம்.பிக்களுக்கு இல்லை என்றும் நாங்கள் செய்வதையே செய்வோம் நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்ற தொனியிலும்; ஆரம்பத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

அது மிகச் சரியான விடயம்தான். ஏனெனில், ஒரு பதவியைக் கொடுக்கின்றபோது, அதற்குப் பொருத்தமான, அதனைச் சுமக்கக் கூடிய ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் கருத்து முரண்பட மாட்டார்கள்.

ஆனால், இப்போது என்.பி.பி. ஊடாக எம்.பிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னர் எம்.பியாக இருந்த அனுபவம் இல்லாதவர்கள். அரசியல் அனுபவம் குறைந்தவர்களும் உள்ளனர். அப்படியென்றால் அவர்கள் எம்.பியாக இப்போது செயற்படவில்லையா?

சரி, இந்த அரசாங்கத்தில் அமைச்சராக, பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் அது சார்ந்த முன்னனுபவத்துடன் வந்தவர்கள்?

ஒரு சிலரைத் தவிர யாருமே அப்படியான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும், அவர்கள் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களக செயற்படவில்லையா?

தங்களுடைய கட்சியில் புத்திஜீவிகளும், படித்தவர்களும். ஓப்பீட்டளவில் சிறந்தவர்களும் இருக்கின்றார்கள் என்றே தேசிய மக்கள் சக்தி பிரச்சாரம் செய்தது. அது பெருமளவுக்கு உண்மை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு சிலர் மூக்குடைபட்டாலும் பலர் கல்வி போன்ற தகுதிகளைக் கொண்டவர்கள்தான்.

இருப்பினும், தங்களது கட்சியில் திறமையானவர்கள் போட்டியிடுகின்றார்கள், சிறந்தவர்கள் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டும். தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் என்று ஆளும் கட்சி சொல்வது உண்மையென்றால், அவர்களுள் முஸ்லிம் எம்.பிக்களில் ஒருவராவது அமைச்சராவதற்கான தகுதியைக் கொண்டிராதவராக இருக்க வாய்ப்பில்லை.

ஒன்றில், அரசாங்கம் வெளியிட்ட இந்த அறிவிப்பு பொய்யானதாக இருக்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரை நியமிக்காமல் விட்டதற்குப் பின்னால் வேறு பலமான காரணங்கள் இருக்க வேண்டும்.

அனுர அலையில் அதிர்ஷ்டவசமாக நாமும் எம்.பி. பதவிக்கு வந்து விட்டோம் என்ற நன்றிக் கடனுக்காக ஆளும் தரப்பு எம்.பிக்கள் நியாயங்களை மறைக்கலாம். இதேபோன்று, கடந்த காலத்தில் ஆட்சியாளர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்த ஆதரவாளர்கள் போல, என்.பி.பியை ஆதரிக்கின்ற சிலரும் இதில் நியாயம் காணலாம்.

ஆனால், இதில் எந்த நியாயமும், தார்மீகமும் இல்லை. என்பதில் சமூகம் பற்றிச் சிந்திக்கின்றவர்களுக்குப் புரியும்.

முஸ்லிம் சமூகம் என்பது தனியொரு தேசிய இனமாகும். எனவே, அந்த மக்கள் தொடர்பான விடயங்களை அமைச்சரவைக்கு முன்னகர்த்துவதற்கும் அங்குப் பேசப்படுகின்ற விடயங்களில் முஸ்லிம்களின் நலன்களையும் உறுதிப்படுத்த ஒரு அமைச்சர் இருப்பதே பொருத்தமானது.

இதனை இரு முஸ்லிம் பிரதியமைச்சர்களாலும் ஏனைய எம்.பிக்களாலும் உடனேயே செய்து விட முடியாது. ஆகவே, பொருத்தமான ஒருவரை அமைச்சராக நியமித்திருக்க வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை யாரும் மறுக்க முடியாது.

அரசாங்கம் இவ்வாறான நியமனம் ஒன்றை இதோ வழங்கப் போகின்றது என்ற கதைகள் பல தடவைகள் வெளியாகிய போதும் முஸ்லிம் எம்.பி. ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.

இந்த அரசாங்கம் இன, மத பேதங்களைக் கடந்து செயற்படுகின்றது. இங்கே சிங்களவர், முஸ்லிம், தமிழர் என்று எந்தப் பாகுபாடும் இல்லை என்று அரசாங்கம் மட்டுமன்றி ஆளும் தரப்பின் முஸ்லிம் எம்.பிக்களும் வக்காலத்து வாங்குவதைத் தொடர்ச்சியாகக் காண முடிகின்றது.

இந்த அரசாங்கம் இனவாதம் இல்லாத அல்லது குறைவான அரசாங்கம் என்பதை எல்லோரும் உணர்கின்றார்கள். ஆனால், அதற்காக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தேவையில்லை என்ற முடிவை எடுக்க முடியாது.. அதை நியாயப்படுத்தவும் இயலாது.

இன, மத, பேதம் பார்ப்பதில்லை என்பதற்காக அதிகமான முஸ்லிம் அமைச்சர்களை நியமித்து விட்டு அன்றேல், பௌத்த சாசனத்திற்கு முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமித்து விட்டு, இதே வியாக்கியானத்தைச் சிங்கள மக்களிடம் கூற முடியுமா? இல்லை…

கடந்த காலங்களில் எல்லா அரசாங்கங்களிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், இது ஒரு சமூகத்திற்குக் கொடுக்கப்படுகின்ற அங்கீகாரமாகும்.

கோட்டபாய அரசில், முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருந்தாலும் பெரிதாக சமூகம் நன்மையடைவில்லை. அதுபோலவே, ஜே.வி.பியால் வழிநடத்தப்படுகின்ற அரசாங்கத்தில் புதிதாக அரசியலுக்கும், நாடாளுமன்றத்திற்கும் வந்த முஸ்லிம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் விரும்பியதை முஸ்லிம் சமூகத்திற்குச் செய்வதற்கு ஜே.வி.பி. இடங்கொடுக்குமா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.

எது எப்படியிருப்பினும், இது ஒரு தீராக் குறையாகும். இன நல்லிணக்கம் வேறு, சமூகத்திற்கான உரிமை வேறு.

ஆயினும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது நிலைப்பாடடில் விடாப்பிடியாக இருக்கின்றது. முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமல் விட்டதை விட அதற்காக அளிக்கப்படுகின்ற வெற்று வியாக்கியானங்கள்தான் என்னென்னவோ போல் இருக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.