;
Athirady Tamil News

தேசிய ஒருமைப்பாட்டை நோக்கிய புதிய திசையில் இலங்கை முஸ்லிம் அரசியல்!

0
இலங்கையின் முஸ்லிம் அரசியல் வரலாறு இன்று ஆழமான விமர்சனங்களுக்கும் சுயபரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அபிலாஷைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புகள் உண்மையில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளன என்ற கேள்வி தற்போது பல தரப்பினராலும் எழுப்பப்படுகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் உத்திகள் எங்கு பலவீனமடைந்தன? சமூகத்தின் அரசியல் பலம் எவ்வாறு சிதைவடைந்தது? தனித்துவக் கட்சிகள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன? இவை அனைத்தும் இன்று முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தீவிரமாக ஆராய வேண்டிய விடயங்களாகும்.

இலங்கை முஸ்லிம் அரசியலின் பிரதான சவால்களில் ஒன்றாகக் கருதப்படுவது, ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் அரசியல் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் அரசியல் அணுகுமுறையாகும். அரசாங்கத்தின் அதிகாரத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூகத்தின் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்ற அரசியல் நம்பிக்கை, பல தசாப்தங்களாகத் தலைமைகளால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால், இந்த அணுகுமுறை முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தரமான அரசியல் பாதுகாப்பையோ, கொள்கை ரீதியான உரிமைகளையோ பெற்றுக்கொடுத்ததா என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அமைச்சுப் பதவிகள் கிடைத்தன; அரசியல் அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்பட்டது; சில தனிநபர்களின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்தது. ஆனால், சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் இந்த அரசியல் எவ்வளவு வெற்றியடைந்தது?

இதுவே முஸ்லிம் அரசியல் சுயபரிசோதனையின் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மறைவுக்குப் பிறகு, முஸ்லிம் அரசியலின் தலைமைத்துவ ஒருமைப்பாடு படிப்படியாகச் சிதைவடைந்தது. தனிநபர் நலன்கள், பிராந்திய அதிகாரப் போட்டிகள் மற்றும் தலைமைகளுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் அரசியல் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது.

ஒரு சமூகத்தின் அரசியல் வாக்குப் பலம் அதன் ஒற்றுமையிலும், கொள்கைத் தெளிவிலும், பேச்சுவார்த்தை நடத்தும் திறனிலும் தங்கியுள்ளது. ஆனால், முஸ்லிம் அரசியல் பல கட்சிகளாகவும், தனிநபர் அதிகார மையங்களாகவும் பிரிந்தபோது, அதன் கூட்டு அரசியல் பேரம்பேசும் சக்தியும் பலவீனமடைந்தது.

பல்வேறு அரசியல் குழுக்களும் தனித்தனி அதிகார மையங்களாக உருவெடுத்தன. சமூகத்தின் பொதுவான அரசியல் இலக்குகளை விடவும், தனிநபர் அரசியல் எதிர்காலமும் பிராந்திய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதுமே சில அரசியல் தலைமைகளின் முன்னுரிமையாக மாறியது என்ற விமர்சனத்தைப் புறக்கணிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தோற்றம் வரலாற்று ரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். ஆனால், தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான அரசியல், ஏனைய சமூகங்களிலிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குச் செல்லும்போது அதன் நோக்கமே கேள்விக்குள்ளாகிறது.

முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் சிங்கள சமூகத்துடனும் தமிழ் சமூகத்துடனும் கொண்டிருக்கும் உறவுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது. இலங்கை என்பது பல இனங்களும் மதங்களும் வாழும் நாடு. எனவே, முஸ்லிம் அரசியலின் வெற்றி என்பது முஸ்லிம் வாக்குகளை மட்டும் ஒருங்கிணைப்பதில் இல்லை; மாறாக, அனைத்து சமூகங்களுடனும் நம்பிக்கையையும் அரசியல் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது.

ஆனால், அடையாள அரசியலின் மிகையான பயன்பாடு சில சந்தர்ப்பங்களில் ஏனைய சமூகங்களுடனான அரசியல் உறவுகளில் இடைவெளிகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல், ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கும் பரந்த ஜனநாயக அரசியலாக வளர்ச்சியடைய வேண்டியிருந்தது.

அளுத்கம, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் முஸ்லிம் அரசியலின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முக்கியமான வரலாற்றுப் பாடங்களாகும்.

குறிப்பாக, கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் எவ்வாறு பாதித்தன என்பதை நாடு மறந்துவிட முடியாது.

இத்தகைய நெருக்கடிகளின்போது அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு அழுத்தமான தேசியத் தீர்மானங்களை உருவாக்கியிருக்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகங்களும் சமூக நெருக்குவாரங்களும் சுமத்தப்பட்டபோது, தீவிரவாதத்தைத் தெளிவாக எதிர்த்து, நிரபராதி மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பான அரசியல் அணுகுமுறை மிகவும் அவசியமாக இருந்தது.

மதத்தின் பெயரால் உருவாகும் தீவிரவாதப் போக்குகளையும், இனவாத அரசியலையும் ஆரம்பத்திலேயே எதிர்கொள்ளத் தவறுவது இறுதியில் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வரலாற்று ரீதியாகப் பல்வேறு பொதுவான பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் கொண்டுள்ளன. காணி உரிமைகள், கல்வி, பொருளாதார அபிவிருத்தி, நிர்வாக அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை உரிமைகள் போன்ற விடயங்களில் இரு சமூகங்களுக்கும் பல பொதுவான அரசியல் தேவைகள் உள்ளன.

இருப்பினும், கடந்தகால அதிகாரப் போட்டிகள், பிராந்திய முரண்பாடுகள் மற்றும் பரஸ்பர அரசியல் சந்தேகங்கள் இந்த உறவுகளைப் பலவீனப்படுத்தின.

தமிழ்–முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தாண்டி, பொதுவான ஜனநாயக உரிமைகளுக்காக இணைந்து செயற்பட்டிருந்தால் சிறுபான்மை மக்களின் தேசிய அரசியல் பலம் மேலும் வலுப்பெற்றிருக்க முடியும்.

எனவே, எதிர்கால முஸ்லிம் அரசியல் என்பது தனிமைப்படுத்தப்பட்ட அரசியல் அல்ல; பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியலாக இருக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களிடையே புதிய எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.

சட்டத்தின் ஆட்சி, ஊழல் ஒழிப்பு, அரசியல் அதிகாரத்தின் பொறுப்புக்கூறல், அரச நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள் போன்ற கொள்கைகள் நாட்டின் அரசியல் மறுசீரமைப்பில் முக்கியமானவையாகும்.

கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்ததன் விளைவாகவே சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டன என்ற விமர்சனம் உள்ளது. எனவே, சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதும், இனவாத மற்றும் மதவாத வன்முறைகளில் ஈடுபடுவோர் அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் அவசியமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மதச் சுதந்திரம், ஆடை முறைகள், கலாசார அடையாளங்கள் மற்றும் மத உரிமைகள் தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்பதில் NPP அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும், சமூகங்களுக்கிடையில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையில் பரஸ்பர புரிதலுடன் இவற்றைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் பார்வையாகும்.

அதேவேளை, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முயற்சி, பிராந்திய அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகத்தில் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளாகவும் பார்க்கின்றது.

தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் புதிய அரசியல் கலாசாரத்தின் உண்மையான வெற்றி மற்றும் கொள்கை ரீதியான நடைமுறைகள் சரியாக நிறைவேற்றப்படுகின்ற அதே இடத்தில், வாக்குறுதிகளும், நடைமுறைச் செயற்பாடுகளும் சரியான அளவுகோலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான அரசியல் கேள்வி, பழைய அரசியல் தலைமைகளையும் அவற்றின் அதிகாரப் போட்டிகளையும் தொடர்வதா அல்லது கொள்கை, சமத்துவம், சமூக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பதாகும்.

அரசியல் கட்சிகள் சமூகத்தின் நிரந்தரமான பாதுகாவலர்கள் அல்ல. அவை மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மட்டுமே. எனவே, எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் செயற்பாடுகள் மக்களின் நலன்களுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்பட வேண்டும்.

முஸ்லிம் புத்திஜீவிகள், இளைஞர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்த மாற்றத்துக்கான விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். தனிநபர் அரசியல் நலன்களுக்காக சமூகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இலங்கையின் எதிர்காலம் இனங்களுக்கிடையிலான போட்டியிலோ, மத அடிப்படையிலான அச்ச அரசியலிலோ கட்டியெழுப்பப்பட முடியாது. அது சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே உருவாக வேண்டும்.

கடந்தகால அரசியல் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய அரசியல் வாய்ப்புகளைப் பொறுப்புடன் மதிப்பிட வேண்டிய காலம் இது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை மக்கள் விழிப்புடன் கண்காணிப்பதுடன், அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அரசியல் மாற்றங்களுக்கு ஜனநாயக ரீதியாகப் பங்களிக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியலின் வெற்றி என்பது அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையிலோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலோ அளவிடப்படக்கூடியதல்ல. ஒரு முஸ்லிம் குடிமகன் அச்சமின்றி வாழ்வதும், தனது மதத்தைப் பின்பற்றுவதும், தனது உரிமைகளைப் பாதுகாப்பதும், ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்துடன் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதுமே அதன் உண்மையான வெற்றியாகும்.

அந்த இலக்கை அடைவதற்கான அரசியல் பாதை, பழைய அதிகாரப் பேரம்பேசல்களிலிருந்து வெளியேறி, கொள்கை அடிப்படையிலான தேசிய அரசியல் பங்கேற்பை நோக்கி நகர்வதாக இருக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.