;
Athirady Tamil News

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் நூலின் வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

0

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு நல்லை ஆதீனத்தில் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் 31.01.2022 நடைபெற்றது.

இதன்போது ஆதீன குருமகா சந்நிதானம் நூலை வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணத்தின் மூத்த சிவாச்சாரியார் நீர்வைமணி சிவஸ்ரீ கு.தியாகராஜக் குருக்கள் அதன் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதியை நீர்வைமணியிடமிருந்து செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், அத்தியார் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் இ.குணநாதன், இந்துசாதனம் பத்திரிகை ஆசிரியர் தியாக. மயூரகிரிக் குருக்கள், சிவசங்கரபண்டிதரின் குடும்ப உறுப்பினர் கணாதிபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நூல் லண்டன் ஞானமயம் வேதாகம அக்கடமி அதிபர் சிவஸ்ரீ கல்யாணசுந்தர சிவாச்சாரியாரின் ஆதரவில் வெளியிடப்பட்டு நீர்வைமண் சார்ந்த இளையோருக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் நீர்வேலியில் இன்றைய அத்தியார் இந்துக் கல்லூரி உள்ள பிரதேசத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்துக் கல்வி போதித்த அறிஞர். நாவலரின் சமகாலத்தவர். சிவப்பிரகாச பண்டிதர் அவர்வாயிலாக அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் என நன்மாணாக்கர் பரம்பரையை உருவாக்கியவர். குருக்கள் குடும்பம் சாராத நிலையில் பல நன்மாணக்கர்களுக்கு குறிப்பாகக் குருமாருக்குச் சமஸ்கிருதம் போதித்த பெருமைக்குரியவர்.

இலங்கையில் மட்டுமன்றித் தமிழகத்திலும் புகழ் பெற்ற சித்தாந்த – சமஸ்கிருத – தர்க்க சாத்திரப் புலமையாளராக அறியப்படுகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.