;
Athirady Tamil News

உக்ரைன் விவகாரம்: ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா-ரஷியா கடும் மோதல்…!!

0

ரஷியா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. சோவியத் யூனியன் பிளவுக்கு பிறகு தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது.

உக்ரைனின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் ரஷியா, அதன் மூலமாக உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முயன்று வருவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில்தான் ரஷியா, உக்ரைனின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷிய எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ரஷியா இதை மறுத்து வருகிறது.

எனினும் அதை நம்பாத அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதற்கு பல்வேறு வகைகளில் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் அமெரிக்கா நேரடியாக மோதி வருகிறது.

இந்தநிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது.

இந்த கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தூதர்கள் வார்த்தைகளால் கடுமையாக மோதிக்கொண்டனர். இருவரும் கடுமையான கோபத்துடன் எதிர்எதிர் நாடுகள் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

படை குவிப்பு குறித்த அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து பேசிய ரஷிய தூதர் வாசிலி நெபென்சியா “உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா திட்டமிட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மேலும் ரஷியாவின் படை குவிப்பு ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றார்.

அதற்கு பதிலளித்த அமெரிக்க தூதர் தாமஸ்-கிரீன்பீல்ட் “நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் ரஷியா இன்னும் அதிகமான படைகளையும், ஆயுதங்களையும் உக்ரைன் எல்லைக்கு அனுப்புகிறது என்பதுதான் உண்மை. உக்ரைனின் வடக்கு எல்லையில் உள்ள அண்டை நாடான பெலாரசில் தனது படைகளை 30 ஆயிரமாக அதிகரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது” என கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய வாசிலி நெபென்சியா, “அமெரிக்கா, ரஷியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜோ பைடன் நிர்வாகம் வேண்டுமென்றே பதற்றத்தை உருவாக்குகிறது” என குற்றம் சாட்டினார்.

வாசிலி நெபென்சியாவின் குற்றச்சாட்டை நிரகாரிப்பதாக கூறிய தாமஸ்-கிரீன்பீல்ட் “இந்த விவகாரத்தில் ஒரு தூதரக தீர்வு இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து நம்புகிறது. ஆனால் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்” என்று எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.