;
Athirady Tamil News

வனாத்துவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம் – மேல் நீதிமன்றில் விசாரணை!!!

0

புத்தளம் – வனாத்துவில்லு, லக்டோ தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியபப்டுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் புத்தளம் மேல் நீதிமன்றில் தக்கல் செய்த வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஏபரல் 4 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகார வழக்கு விசாரணைகள், இன்று (10) இவ்வழக்கினை விசாரணை செய்யவென புத்தளம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.

இதன்போதே இதர்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் தொடர்ச்சியாக இவ்வழக்கினை விசாரணை செய்ய திகதிகளைக் குறித்த சிறப்பு நீதிமன்றம், ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு மேலதிகமாக மே 30,31 ஆம் திகதிகளிலும், ஜூன் 1,7,9 ஆம் திகதிகளிலும் அவ்விசாரணைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானித்தது.

இதற்காக 9, 11 முதல் 15 வரையிலான சாட்சியாளர்களுக்கு சாட்சியம் வழங்க மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலும் முதற்கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 6 பேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றப் பகிர்வுப் பத்திரமும் கையளிக்கப்பட்டுள்ளது.

நாசகார அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் எண்ணத்துடன் வனாத்துவில்லு பகுதியில் வடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை சேகரித்தமை, வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயுத களஞ்சியத்துடன் கூடிய வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குற்றப் பத்திரிகை தமிழ் மொழி மூலம் கையளிக்கப்பட்டிருந்த போதும், அதனுடன் கூடிய இணைப்புக்கள் தமிழ் மொழியில் வழங்கப்பட்டிருக்காத நிலையில், அவற்றைப் பெற்றுக்கொடுக்க வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று, 1,2 ஆம் பிரதிவாதிகளுக்காக மட்டும் சட்டத்தரணிகளான மொஹம்மட் அக்ரம், நதீஹா அப்பாஸ், மொஹம்மட் சாஜித் ஆகியோருடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அந்த இணைப்புக்களில் தமிழ் மொழி பெயர்ப்பை வழங்க சட்ட மா அதிபர் இணங்கிய போதும் சில மொழி பெயர்ப்புக்கள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக ஆஜரான அரச சட்டவாதி அவற்றை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க முடியும் என தெரிவித்தார்.

அதன்படி அந்த மொழி பெயர்ப்பு ஆவணங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவித்தது.

இந் நிலையில் முதல் இரு பிரதிவாதிகளுக்காகவும் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அவர்கள் சார்பில் எழுத்து மூலம் பிணைக் கோரிக்கை சமர்ப்பணத்தினை முன் வைத்திருந்தார்.

நீண்டகாலமாக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

அது தொடர்பில் பிணைக் கோரிக்கை வாதத்தினை சாட்சி விசாரணைகளின் ஆரம்பத்திலேயே முன் வைக்க தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறிய நிலையில், அதற்கு சட்ட மா அதிபர் தரப்புப் பதில் வாதங்களை முன் வைக்க வேண்டி உள்ளதால் அது குறித்த நடவடிக்கைகள் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.