;
Athirady Tamil News

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: வடமாகாண ஆளுனரிடம் மகஜரும் கையளிப்பு!! (படங்கள்)

0

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், வடமாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

வவுனியா, பூங்கா வீதியில் உள்ள ஆளுனரின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று (21.02) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ‘முன்பள்ளி கலைத்திட்டத்தை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?, இன்றைய விலை வாசியில் 6000 ரூபாய் போதுமனதா, உழைப்பிற்கான ஊதியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும், கல்விப் பயணத்தின் முதற்படியான ஆசிரியர்களை முழுமையாக்குங்கள’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களாக பல வருடங்களாக நாம் பணியாற்றுகின்ற போதும், உதவித் தொகையான வெறும் 6000 ரூபாய் மட்டுமே எமக்கு கிடைக்கின்றது. தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் இந்த 6000 ரூபாய் பணத்தை வைத்து நாம் எவ்வாறு குடும்ப சீவியத்தை கொண்டு நடத்த முடியும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என பலரும் சேவை நோக்கத்தோடு பணியாற்றி வருகின்றோம். எனினும் எம்மால் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது. எமது குடும்பங்கள் பட்டினியால் இறக்கும் நிலை வரும். எனவே எமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு நாம் இந்த அரசாங்கத்திடம் கோருகின்றோம். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டுமே தருகிறார்கள் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா அவர்களது கோரிக்கை தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாரத்திற்குள் தீர்க்கமான முடிவினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.