;
Athirady Tamil News

சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் ஒரு தசாப்த காலத்துக்கு பின்னர் புனருத்தாரணம்!! (படங்கள்)

0

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று பழைமை வாய்ந்த சிக்கன மற்றும் கடன் வழங்கல் கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான சொறிக்கல்முனை 06 ஆம் வட்டாரம் கிராமம் மகளிர் சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் ஒரு தசாப்த காலத்துக்கு பின் புதன்கிழமை(27) புனரமைப்பு செய்யப்படது.

நாட்டில் கூட்டுறவு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு சில வருடங்களில் பெண்களுக்கென தீர்க்கதரிசனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டுறவு சங்கம் 1980 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் யுத்தம் மற்றும் ஆழி பேரலை அனர்த்தம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக இது செயல் இழக்க நேர்ந்தது.

இந்நிலையில் கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதனின் பகீரத முயற்சியில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆறுமுகம் நடராசலிங்கத்தின் வழி நடத்தலில் தற்போது இதற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவராக இராமன் காந்திமதி, உப தலைவராக மாதவன் தயாளினி, செயலாளராக வேலு புவனேஸ்வரி, பொருளாளராக விஜயரட்ணம் ரூபிகா, நிர்வாக உறுப்பினர்களாக கண்ணன் புஷ்பம், சோணமுத்து நாகலச்சுமி, நேசதுரை ரஞ்சனி ஆகியோரை கொண்ட நடப்பாண்டு நிர்வாகம் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது.

சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இங்கு உரையாற்றியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டும், நான் அரசியல் பேசவில்லை, நிர்வாக விடயங்கள் சம்பந்தப்பட்டுதான் சொல்கின்றேன், குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் கட்டாயம் மாற்றப்பட வேண்டும், கிழக்கில் கூட்டுறவு துறையை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக நான் அவருக்கு மூன்று கடிதங்களை அனுப்பி, கையளித்து இருந்தேன், அவரிடம் இருந்து எந்த பதிலும் இது வரை கிடைக்கவில்லை, அவர் வெளி மாகாணத்தை சேர்ந்தவர், இதனால் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற பற்றுறுதி அவரிடம் கிடையாது, அதை அவரிடம் எதிர்பார்க்கவும் முடியாது, கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ந்தேச்சையாக வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர், இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், இம்மாகாணத்தை சேர்ந்த பொருத்தமான ஒருவரே இம்மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நடராசலிங்கம் உரையாற்றியபோது இக்கூட்டுறவு சங்கம் இன்னமும் அதிக உறுப்பினர்களை உள்வாங்கி இயங்க வேண்டும், எதிர்காலத்தில் பிரமாண்டமான சாதனைகளை படைக்க வேண்டும், அங்கத்துவம் வகிக்கின்ற மகளிர்களின் வாழ்வாதாரத்தை கணிசமான அளவில் முன்னேற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.