சடலத்தால் 3 ரயில்கள் இடை நடுவே நின்றன!!
மலையக ரயில் பாதையின் கிதல்எல்ல மற்றும் ஹீல்ஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் 166 மைல் கல் பகுதியில் காணப்பட்ட சடலமொன்றால் இன்று (31) 3 ரயில்களின் பயணங்கள் தாமதமாகின.
இதற்கமைய, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி அதிகாலை 5.55 பயணித்த உடரட்டமெனிகே ரயில் எல்ல ரயில் நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரண்டு தபால் ரயில்கள் ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய ரயில் நிலையங்களிலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் குறித்த சடலம் அப்புறப்படுத்தப்படும் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
அத்துடன் பண்டாரவளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, காலிங்க ஜயசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, செயற்பட்ட எல்ல பொலிஸார் குறித்த சடலம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து, பண்டாரவளை பதில் நீதவானிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பண்டாரவளை பதில் நீதவான் செனவிரத்ன பிரதேச விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தியதலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு ரயில் வீதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் கிதுல்எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரவு நேர ரயிலில் மோதி இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினமும் (30) பதுளை தெய்யன்வெல பகுதியில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என பதுளை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.