;
Athirady Tamil News

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு..!!

0

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். சூரத், அகமதாபாத் ஆகிய இடங்களில் மிகப்பிரமாண்டமான வாகன பேரணியையும் நடத்தினார். அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை 50 கிலோ மீட்டர் தூரம் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டினார். வழிநெடுக 10 லட்சம் பேர் திரண்டிருந்தனர். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. உள்ளூர் தலைவர்களே பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், ஆகியோர் ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்தனர். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக கடுமையாக போராடியது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.