;
Athirady Tamil News

கேரள திருமணத்தில் ருசிகரம்: அர்ஜென்டினா, பிரான்ஸ் சீருடை அணிந்த புதுமண தம்பதி..!!

0

கத்தாரில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி கடந்த 18-ந் தேதி நடந்த அர்ஜென்டினா-பிரான்ஸ் இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்ற கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ். ராதாகிருஷ்ணன் கம்மத் – ஆர்.வித்யா தம்பதிகளின் மகன் சச்சின் ஆர்.கம்மத்துக்கும் (இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்), கொச்சி ரமேஷ்குமார் – சந்தியா ராணி தம்பதிகளின் மகள் ஆர்.ஆதிராவுக்கும் (சி.ஏ.வுக்கு படித்து வருகிறார்) திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி கடந்த 18-ந் தேதி எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் தீவிர கால்பந்தாட்ட ரசிகர்கள். மணமகன் சச்சின் கம்மத் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். மணப்பெண் ஆதிரா பிரான்ஸ் வீரர் எம்பாபெயின் ரசிகர். திருமணநாளில் அர்ஜென்டினா- பிரான்ஸ் இறுதிப்போட்டி நடைபெற்றதால் மணமக்கள் இருவரும் திருமணத்திற்கான பட்டாடையுடன் தங்களது விருப்பப்பட்ட அணி வீரர்களின் சீருடையை (ஜெர்சி) மேலாடையாக அணிந்து கொண்டு மேடைக்கு வந்தனர். தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமக்களின் விசித்திரமான கோலத்தை முதலில் வினோதமாக பார்த்தனர் திருமணத்திற்கு வந்தவர்கள். பின்னர் ருசிகர சம்பவமாக ஏற்றுக்கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிபரவி வருகிறது. திருமண வரவேற்புக்கு பின்னர் இருவரும் இறுதிப்போட்டி இரவில் முடியும் வரை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். இறுதி போட்டியில் கணவரின் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற போதிலும், கணவரின் வெற்றியை தனக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து மணப்பெண் ஆதிரா கணவரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.