;
Athirady Tamil News

4 மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலவரம்: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஆய்வு கூட்டம் இன்றும், நாளையும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார் .

அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் கார்மேகம் தலைமையில் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்து ஓய்வெடுத்தார். இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட விவசாயிகள், தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் கலெக்டர் அலுவலக 4-வது தளத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டி.ஐ.ஜி, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த 4 மாவட்டங்களில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இரவு சேலத்தில் தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மா.சுப்பிரமணியன் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முன்னதாக நாளை காலை பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது.

இதே போல சேலம் அரசு மருத்துவமனை, மாநகரிலுள்ள ஓரிரு போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொள்ளார் என்றும் கூறப்படுகிறது. சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓமலூர் அடுத்த காமலாபுரம் செல்லும் முதல்-அமைச்சர் மு. க . ஸ்டாலின் நாளை பிற்பகல் 4.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சிவகுமார் ஆகியோர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மாநகர பகுதிக்கு வரும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை, கூட்டம் நடைபெறும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வரும் பொது மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா தலைமையில் சேலம் உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.