;
Athirady Tamil News

“புத்த ரஷ்மி” வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு!! (PHOTOS)

0

கொழும்பு, ஹுணுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) ஆரம்பமானது.

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வெசாக் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஜனாதிபதி, மின்விளக்கு அலங்காரங்களை திறந்து வைத்ததுடன், ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளில் நடைபெற்ற வண்ணமயமான பக்திப் பாடல் இசை நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கங்காராம விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி “புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில்” மின் விளக்குகளை ஒளிடரவிட்டு அதனை திறந்து வைத்தார்.

தெற்காசிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வெசாக் வலயத்தில் பௌத்த பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நாடுகளால் கண்காட்சி கூடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

அந்தக் கண்காட்சி கூடங்கள் அனைத்தையும் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள பௌத்த வடிவமைப்புகளை அவதானித்ததுடன், அந்த வடிவமைப்பாளர்களின் விபரங்களையும் கேட்டறிந்தார்.

பாகிஸ்தான் பௌத்த பாரம்பரிய கண்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பொன்றை இட்டார்.

பின்னர் கங்காராம விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை பார்வையிட வந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் பர்கி, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.