;
Athirady Tamil News

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு- புதிய சட்டத்திற்கு ஜெர்மன் பாராளுமன்றம் ஒப்புதல்!!

0

ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. Powered By VDO.AI ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 234 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்; 31 பேர் வாக்களிக்கவில்லை. கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் இணைந்த பழமைவாத பாராளுமன்ற குழு இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

இந்த சட்டத்தால், திறமையற்ற தொழிலாளர்கள் ஜெர்மனியில் நுழைவது எளிதாகி விடும் என அவர்கள் குறிப்பிட்டனர். தீவிர வலதுசாரி கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. வேலைக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தொழில்முறை தகுதிகள், வயது மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் நுழைவதில் இருந்த தடைகளை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையிலான (points-basis) அமைப்பு இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு திறமையான தொழிலாளர்கள் இல்லாததால் காலியிடங்களை நிரப்புவதில் உள்ள சிக்கல்களால் ஜெர்மனியில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லாடி வருவதாக ஜெர்மன் தொழில் வர்த்தக சபை கூறியிருக்கிறது.

ஜெர்மன் தொழில் வர்த்தக சபையானது நாடு முழுவதிலும் 22000 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், பணியமர்த்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த வருட இறுதியிலிருந்தே ஆட்குறைப்பு செய்து வருகின்ற நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு, ஜெர்மனியிலிருந்து வரும் இச்செய்தி மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.