;
Athirady Tamil News

அமெரிக்காவின் டிராகன் விண்கலத்தில் சென்ற வாத்து பொம்மை ; காரணம் என்ன?

0

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மிகவும் மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மை ஒன்றுடன் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.

இந்த விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர்.

ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களை வரவேற்றனர்.

முன்னதாக விண்வெளி பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் வீடியோ மூலம் தங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது, இந்த பயணத்தில் தங்களுடன் ‘ஜாய்’ என்ற 5-வது நபர் ஒருவர் உள்ளதாக அவர்கள் கூறினர்.

‘ஜாய்’ என்று அவர்கள் குறிப்பிட்டது மிகவும் மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மை ஆகும். இந்த வாத்து பொம்மையை சுபான்ஷு சுக்லாவின் மகன் தேர்வு செய்தார் என்று கூறப்படுகிறது.

ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்கள் பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து தப்பி, ஈர்ப்பு விசை இல்லாமல், எல்லையற்று பரந்து கிடக்கும் விண்வெளிக்குள் நுழைந்துவிட்டார்கள் என்பதை முதலில் உணர்த்துவது இந்த மென்மையான பொம்மைதான்.

விண்வெளிக்கு சென்றவுடன் இந்த பொம்மைதான் முதலில் மிதக்கத் தொடங்கும்.

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் இவ்வாறு மெல்லிய எடை கொண்ட பொம்மைகளை கொண்டு செல்வது கிட்டத்தட்ட ஒரு பாரம்பரியமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மனித வரலாற்றில் முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற சோவியத் ஒன்றியத்தின்(ரஷியா) விண்வெளி வீரர் யூரி கேகரின், தன்னுடன் ஒரு சிறிய பொம்மையை கொண்டு சென்றார்.

அதனை பின்பற்றி, விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தங்களுடன் இதுபோன்ற பொம்மைகளை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.