;
Athirady Tamil News

ரூ.1 கோடி கொடுத்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியத் தம்பதிக்கு நடந்த கொடூரம்!!

0

குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர்.

ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி ஈரானில் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், குஜராத் அரசு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் காவல்துறையின் முயற்சியின் உதவியுடன், தம்பதியினர் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் ஈரானில் இருந்து துருக்கிக்கு பறந்து பின்னர் புதன்கிழமை பிற்பகல் குஜராத்தை அடைந்தனர், தற்போது காந்திநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பங்கஜ் படேலின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிகிச்சையளித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நீரிழப்பு, உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மன அதிர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் பங்கஜ் படேலின் மனைவி நிஷாபென் படேலின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். ஈரான் சென்றபோது ஒரு கும்பல் இவர்களை பிணைக்கைதியாக பிடித்ததோடு விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆமதாபாத்தில் உள்ள கிருஷ்ணாநகர் காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம், ஆமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவும் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளன.

போலீஸில் அளிக்கப்பட்டிருந்த புகாரின்படி, பங்கஜின் முதுகில் ஒரு நபர் பிளேட் மூலம் வெட்டுவது போன்று வீடியோ எடுக்கப்பட்டு குடும்பத்தினருக்கு அனுப்பட்டது, தம்பதியினரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று அவர்கள் கூறியதோடு தங்களிடம் சிக்கிய பெண்ணை அநாகரீகமாக வீடியோ எடுப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆமதாபாத்தில் வசிக்கும் பங்கஜ் படேலும் அவரது மனைவி நிஷா படேலும் அமெரிக்கா செல்ல விரும்பியுள்ளனர். இதையடுத்து, இருவருக்கும் காந்திநகரைச் சேர்ந்த ஏஜெண்ட் அபய் ராவல் மூலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷகீல் என்ற ஏஜெண்டுடன் தொடர்பு ஏற்பட்டது. முதலில் ஈரான் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஷகீல் அவர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளையும் ஷகீல் தொடங்கியுள்ளார். இருவரையும் அமெரிக்காவுக்கு அனுப்ப ரூ.1.15 கோடி பணம் பேசப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் தேதி பங்கஜ், அவரது மனைவி ஆகியோர் விசா வேண்டி ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்றனர். மாலைக்குள் பதிலளிப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12ஆம் தேதி ஈரானுக்கு புறப்பட்டு செல்லவேண்டும் என்று தம்பதியிடம் ஷகீல் கூறியுள்ளார்.

அவர்களுடன் மற்றொரு ஏஜெண்ட்டான முனிருதீன் சித்திக் என்பவரும் உடன் இருப்பார் என்று ஷகீல் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ஈரான் சென்ற விமானம், துபாயில் ஐந்து மணி நேரம் நிறுத்தப்பட்டது. துபாய் சென்றதும் தங்களது உறவினருக்கு அவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர். அதன்பின்னர், அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போனது.

இதற்கிடையில், பங்கஜும் நிஷாவும் மெக்சிகோவை அடைந்து விட்டார்கள், பணத்தை தயாராக வைத்திருங்கள் என்று ஆமதாபாத்தில் உள்ள ஏஜெண்ட் அபய் ராவலுக்கு அழைப்பு வந்தது. அதன்பின்னர், பங்கஜ், நிஷா அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை, எனவே அவர்கள் பணத்தை கொடுக்க விரும்பவில்லை என்று மற்றொரு அழைப்பு அபய் ராவலுக்கு அழைப்பு வருகிறது.

பங்கஜ், நிஷா எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, நிஷா வேறு நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால், குடும்பத்தினர் அவர்களை பற்றி கவலைப்பட தொடங்கினர்.

இந்நிலையில், பங்கஜ் மற்றும் நிஷா குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ ஒன்று அனுப்பப்பட்டது. இதில், பங்கஜ் ஆடையில்லாமல் இருந்தார். மீதம் பணத்தை தரவில்லை என்றால் அவரது நிர்வாண படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகிவிடும் என்றும் குடும்பத்தினரை ஏஜெண்ட்கள் மிரட்டியுள்ளனர்.

உடனடியாக பங்கஜின் சகோதரர் சங்கேத் படேல் அபய் ராவலின் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அபய் ராவல் சங்கேத்திடம், பணத்தை பெறுவதற்காக அவர்கள் இவ்வாறு மிரட்டுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், பணத்துக்கு பொறுப்பான ஒரு நல்ல நபர் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளார். எனவே, விரைவிகள் பங்கஜ், நிஷா ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், பங்கஜை அடிக்கும் மற்றொரு வீடியோ பங்கஜின் நண்பர் பிரியங்கிற்கு அனுப்பப்பட்டது. மேலும், பங்கஜ் உடலில் பிளேடால் வெட்டி அதையும் வீடியோவாக அனுப்பியுள்ளனர்.

அபய் ராவல் தனது ஆளை ஈரானுக்கு அனுப்பினார். ஆனால் பங்கஜ் மற்றும் நிஷாவை சிறைபிடித்திருந்த நபர்கள், ` முதன் தவணை பணம் எங்கள் கைகளில் கிடைத்த பின்னர் நிஷா விடுவிக்கப்படுவார். மீத பணம் கிடைத்ததும் பங்கஜை விடுதலை செய்வோம்` என்று கூறியுள்ளனர்.

6 லட்சம் கேட்டுள்ளனர். இந்த பணம் அவர்களிடம் தாமதமாக கிடைத்ததால் மேற்கொண்டு 5 லட்சம் கேட்டுள்ளனர். சங்கேத் படேல் 4 லட்சம் ரூபாயை கொடுத்தார். இவ்வாறு 15 லட்சம் ரூபாயை பெற்றுகொண்ட பின்னரே இருவரையும் ஈரானில் இருந்தவர்கள் விடுதலை செய்துள்ளனர்.

பங்கஜ், நிஷாபென் ஆகியோரை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அவர்கள் விட்டுச் சென்றனர். அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் கொஞ்சம் பணம் இருப்பதை குடும்பத்தினர் அறிந்தனர். ஆனாலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. எனவே பங்கஜின் சகோதரர் சங்கேத் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்விக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை ஹர்ஷ் சங்வி நாடினார். பின்னர் ஈரானுக்கு நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் ஜான் மாயை தொடர்புகொண்டனர். இறுதியாக. பங்கஜ் மற்றும் நிஷாவின் இருப்பிடம் தெரியவந்தது.

பங்கஜ் பிளேடால் கொடூரமாக வெட்டப்பட்டதால் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தம்பதியினர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பங்கஜின் சகோதரர் சங்கேத் படேல் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் அபய் ராவல், ஹைதராபாத் ஏஜெண்ட் மீது இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
பங்ஜக் தற்போது எப்படி உள்ளார்?

பங்கஜ் படேல் காந்திநகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அவரது மருத்துவர் உத்சவ் படேல் தெரிவித்தார். “பங்கஜ்பாய் சிகிச்சைக்காக காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது முதுகில் பிளேடால் சுமார் 20-25 காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர் நீரிழப்பு மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

பங்கஜ் படேல் கடுமையான மன அதிர்ச்சிக்கு ஆளானதாகக் கூறிய மருத்துவர், “அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அவரது மன நிலை சாதகமாக இல்லை. அனைத்தையும் விளக்க எங்களுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆனது. பங்கஜ்பாயின் மன நிலை தற்போது சற்று பலவீனமாக உள்ளது. பங்கஜ்பாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்போது மிகவும் பயந்து இருந்தார். அனைவரை பார்த்தும் அவர் பயந்தார். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதும், ‘இன்னும் அதே இடத்தில் தான் இருக்கிறேன்’ என்ற உணர்வில் அவர் இருந்தார். நாம் பார்க்க முடியாத அளவுக்கு அவரது நிலை மோசமாக இருந்தது”என்று தெரிவித்தார்.

இதனிடையே பங்கஜ் படேலின் மனைவி நிஷா படேலிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவரின் கூற்றுப்படி, நிஷாவும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கஜ் மற்றும் நிஷா தெஹ்ரான் சென்றடைந்தபோது, ஏஜெண்ட் ஒருவர் அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

இந்த ஏஜெண்ட் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று பங்கஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். எனினு, இந்த ஏஜெண்டை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறை கூறுகிறது.

பங்கஜ் மற்றும் நிஷாவை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்ப விரும்பிய பாதை செயலில் இல்லை. எனவே புதிய வழித்தடத்தில் அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப ஷகீல் முடிவு செய்துள்ளார்.

இந்தப் புதிய வழித்தடத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏஜெண்ட்களில் பெரும்பாலான ஏஜெண்டுகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்கஜ் மற்றும் நிஷாவை ஈரானில் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்த ஏஜென்ட் பெயர் வாசிம் என தெரியவந்துள்ளது. ஈரான் வழியாக அமெரிக்காவிற்கு தம்பதிகளை அனுப்பினால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று வசீம் கருதினார். அதனால் அவர்களை சிறைபிடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து அவர்களை மிரட்டிய தொடங்கிய ஏஜெண்ட், பணம் தந்ததால் தான் விடுதலை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தம்பதி இருவரையும் அமெரிக்காவுக்கு அனுப்புவதாக கூறி உதவிய குஜராத்தைச் சேர்ந்த ஏஜெண்ட்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய கிருஷ்ணாநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஏ.ஜே. சௌஹான், “இப்போது இந்த ஏஜெண்ட்கள் தங்கள் அலுவலகங்களைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர், ஆனால் அவர்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். வழக்கின் மேல் விசாரணைக்காக ஹைதராபாத் செல்லவும் குஜராத் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஆமதாபாத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் பிந்து கவுஸ்வாமி மற்றும் காந்திநகரைச் சேர்ந்த அபய் ராவல் ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 364-ஏ, 406, 420, 120-பி ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தவிர, அடையாளம் தெரியாத மற்றொரு ஏஜெண்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, பிபிசி குஜராத்தி ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டது ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

இதுபோன்ற போலியான ஏஜெண்ட்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று குடிவரவு மற்றும் விசாக்களை கையாளும் ஆதிகாரப்பூர்வ முகவர்கள் கூறுகின்றனர். “முதலில் அவர்கள் அமெரிக்காவுக்கு போக தூண்டப்படுகின்றனர். இரண்டாவதாக, அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லாததால், உடனடியாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் சிக்கிக் கொள்கின்றனர்” என்கின்றனர்.

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்ல தற்போது ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்கின்றனர் என்று தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.

விசா ஆலோசகர் லலித் அத்வானி பிபிசி குஜராத்தியிடம் பேசும்போது, “அமெரிக்காவிற்கு செல்ல பல அதிகாரப்பூர்வ வழிகள் உள்ளன, எனவே மக்கள் ஏன் அதிகாரப்பூர்வமற்ற வழிகளைத் தேர்வு செய்கிறார்கள்? அதுவும் ஈரானில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வதா? ஈரான் அமெரிக்காவின் எதிரி ஆகியிற்றே” என்றார்.

பேராசை கொண்ட விளம்பரங்களால் மக்கள் ஏமாறுவதாகவும் விசாவில் சம்பந்தப்பட்டவர்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும் இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

“இந்தியாவில் யார் வேண்டுமானாலும் விசா ஆலோசகராகலாம். அத்தகைய முகவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்கிறார் லலித் அத்வானி.

‘குஜராத் மக்களுக்கு டாலர் கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைஇருக்கிறது. வெளிநாட்டில் வாழும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்றும் , நல்ல மணமகள் அமையும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் அவர்கள் அமெரிக்கா செல்ல தங்கள் வீட்டு நிலங்களையும், பண்ணைகளையும் விற்கத் தயங்குவதில்லை.’ என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு முகவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பங்கஜ் மற்றும் நிஷாவின் குடும்ப உறுப்பினர்களே, ஒருபோதும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று மக்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

பங்கஜ் படேலின் சகோதரர் சங்கேத் படேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹர்ஷ் சங்விக்கு வாட்ஸ்அப் செய்தியை மட்டுமே அனுப்பினோம். அவர் எனது சகோதரர் மற்றும் அவர் மனைவியை வெறும் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர பெரிதும் உதவினார். ஆமதாபாத் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்த விஷயத்தில் பங்கஜ் படேலுடன் பணியாற்றிய ரோஷன் சவுகானிடம் பேச பிபிசி முயன்றது, ஆனால் அவரும் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார். பங்கஜ் படேலின் நண்பரான பிரியங்க் படேல் பிபிசி குஜராத்தியிடம் பேசியபோது, “அவரது குடும்பம் இப்போது துக்கத்தில் உள்ளது, அதனால் அவர்கள் அதிகம் பேசுவதில்லை. பிபிசி குஜராத்தியிடம் பேசும்போது அவர்கள் விவரங்களைத் தருவார்கள்” என்றார்.

எவ்வளவு பணத்தை செலவு செய்தாவது அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்ற தங்களின் கனவை நினைவாக்க பலர் முனைகிறார்கள். அமெரிக்கா செல்லும் வெறியில் சிலர் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பாதையில் செல்கிறார்கள்.

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்படும் நபர்கள் இயற்கையான தடைகள் மட்டுமல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட பல தடைகளையும் கடக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும், மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது என்பது உள்ளூர் அரசியலின் பிரச்சினையாகும். சமீபத்தில், மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விவாதம் நடத்தினர்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா வழியாக கனடாவுக்கும், கனடா வழியாக அமெரிக்காவிற்கும் சட்டவிரோதமாக நுழைவது இப்போது கடினமாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.