;
Athirady Tamil News

வாடகை உயர்வு.. வருவாய் குறைவு: தவிக்கும் இங்கிலாந்து பெண்கள்!!

0

இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது. பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.

புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது. “ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்” என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார். சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது. வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.