;
Athirady Tamil News

ஆபத்தான க்ளஸ்டர் வெடிகுண்டுகளை யுக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா !!

0

மிக ஆபத்தான ‘க்ளஸ்டர் வெடிகுண்டுகள்’ என்று அழைக்கப்படும் கொத்து குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், கொத்துக் குண்டுகளின் ஆபத்து காரணமாகவே யுக்ரேன் நாட்டுக்கு அவற்றை அளிப்பதை இத்தனை மாதங்களாக தாமதப்படுத்தியதாக தெரிவித்தார்.

“இருப்பினும் யுக்ரேன் நாட்டில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

கொத்துக் குண்டுகள் ஆபத்தானவை என்பதால் தான் அவற்றை யுக்ரேனுக்கு அளிக்க அதிக காலதாமதம் செய்ததாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெள்ளியன்று தெரிவித்தார்

மேலும், யுக்ரேனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள் ரஷ்யாவால் ஏற்கனவே யுக்ரேன் மீதான போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட மிகவும் பாதுகாப்பானவை என்றார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவு “சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு” என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், இது அமெரிக்காவின் மோசமான நிலையைக் காட்டுவதாக கடுமையாக சாடியுள்ளார்.

கொத்து குண்டுகள் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவைப் பற்றி நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்ததாக வெள்ளிக்கிழமை சிஎன்என் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

கொத்துக் குண்டுகள் என்பவை ராக்கெட், ஏவுகணை அல்லது பீரங்கி போன்ற உபகரணங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை சிதறடிக்கும் ஒரு தாக்குதல் முறையாகும். இந்த தாக்குதலில் ஒரு பெரிய குண்டின் உள்ளே பல சிறிய குண்டுகளை வைத்து ராக்கெட், ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து குண்டு வீசப்படுகிறது.

இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் எறியப்படும் என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்தபின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே இலக்கின் பரந்த பகுதியைத் தாக்கும் தன்மை உடையவை.

இந்த பெரிய குண்டில் இருந்து வெளியேறும் சிறிய குண்டுகள் வெடிக்கும் தன்மை உடையவை என்றாலும், ஈரமான அல்லது மென்மையான நிலத்தை அடைந்தால் அவை வெடிக்காது. இதனால் தாக்குதல் நடக்கும் போதும் இந்த குண்டுகள் ஆபத்தானவை, தாக்குதலுக்குப் பின் வெடிக்காமல் இருக்கும் குண்டுகளும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இவற்றை வானில் இருந்து இலக்கை நோக்கி வீசவும் முடியும். தரையில் இருந்து மற்றொரு இலக்கை நோக்கி தாக்குவதற்கும் பயன்படுத்த முடியும்.

தரையை அடைந்த பின்னரும் வெடிக்காமல் இருக்கும் குண்டுகள் ‘டட்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. இந்த வெடிக்காத குண்டுகள், பின்னர் ஏதோ ஒரு நேரத்தில் வெடித்து, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம், அல்லது பலத்த காயங்களை ஏற்படுத்தலாம்.

ராணுவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அகழிகள் மற்றும் பதுங்கு குழிகளில் மறைந்திருக்கும் ராணுவத்தினர் மீது இது போன்ற குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இத்தாக்குதலில், அந்த பதுங்கு குழிகளைச் சுற்றிலும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை கவனமாக அகற்றாவிட்டால் அங்கிருந்து யாரும் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவை ஆபத்தானவை.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதன் காரணமாக இந்த வகையான குண்டுகளைப் பயன்படுத்துவதை அல்லது சேமித்து வைப்பதை அந்த உடன்படிக்கை சட்டவிரோதமாக்குகிறது.

கொத்து குண்டுகளின் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களில் ஏராளமானோர், குறிப்பாக குழந்தைகள் படுகாயமடைந்து வாழ்க்கையில் பெரும் துயரங்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குடியிருப்புக்கள் மற்றும் வேளாண் நிலங்களில் வெடிக்காமல் கிடக்கும் இந்த குண்டுகள் சாதாரண பொம்மையைப் போல் இருப்பதால், பெரும்பாலும் ஆர்வத்தின் காரணமாக அவற்றை அப்பாவி பொதுமக்கள் கைகளில் எடுக்கின்றனர்.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன.

இவற்றைத் தடை செய்யும் உடன்படிக்கையில் இந்த இரு நாடுகளும் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும், முன்னர் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான கொத்து குண்டுகளைப் பயன்படுத்திய போது அது குறித்து கடுமையாக விமர்சித்தது.

ரஷ்யாவின் கொத்து குண்டுகளில் 40% குண்டுகள் வெடிக்காத “டட்” களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தரைப்பகுதியில் ஒரு பெரிய ஆபத்தாகவே உள்ளது. ஆனால் சராசரியாக 20% அளவுக்கே இந்த “டட்”கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்க அரசு அதன் சொந்த கொத்துக் குண்டுகள் 3% க்கும் குறைவான “டட்” வீதத்தைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகிறது.
யுக்ரேன் ஏன் அவற்றைக் கேட்கிறது?

யுக்ரேனிய படைகளிடம் பீரங்கி குண்டுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலும், ரஷ்யர்களைப் போலவே, யுக்ரேனிய ராணுவமும் அவற்றை அசாதாரணமாக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகிறது. மேலும், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் அந்த எண்ணிக்கையிலான ஆயுதங்களை அவர்களுக்குத் தரமுடியாது.

யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பெரும்பாலும் பீரங்கிகளைப் பயன்படுத்தும் நிலையே காணப்படுகிறது.

1,000 கிமீ (621 மைல்) தொலைவுக்கு கிணறு போன்ற தற்காப்பு நிலைகளில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யர்களை வெளியேற்றும் முயற்சியில் யுக்ரேனியர்கள் இப்போது ஒரு சவாலான பணியை எதிர்கொள்கின்றனர்.

போதுமான பீரங்கி குண்டுகள் இல்லாத நிலையில், அந்த தற்காப்பு அகழிகள் அனைத்தையும் நிர்வகிக்கும் ரஷ்ய காலாட்படையை குறிவைக்க, கொத்துக் குண்டுகளை அளித்து உதவுமாறு அமெரிக்காவிடம் யுக்ரேன் கேட்டுள்ளது.

ஆனால் இது வாஷிங்டனுக்கு அவ்வளவு எளிதான வேண்டுகோளாக இருக்கவில்லை. மேலும் அமெரிக்காவில் உள்ள பல ஜனநாயகவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஏற்கமாட்டார்கள். எனவே யுக்ரேனின் இந்த வேண்டுகோள் குறித்து குறைந்தது ஆறு மாதங்களாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போரில் தார்மீக அடிப்படையில் யுக்ரேனுக்கு உதவி வரும் அமெரிக்காவை, அந்த இடத்திலிருந்து அகற்றுவதே உடனடி விளைவாக இருக்கும்.

ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்கா யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அளித்தால், அமெரிக்கா மீதும் குற்றச்சாட்டுக்கள் எழும். இது ரஷ்யாவுக்கு சாதகமான ஒரு நிலையை அளிக்கும்.

கிளஸ்டர் வெடிமருந்துகள் ஒரு பயங்கரமான, கண்மூடித்தனமான ஆயுதங்களாக இருக்கின்றன. ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த வகை குண்டுகள் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தற்போதைய முடிவு காரணமாக, க்ளஸ்டர் குண்டுகளைத் தடை செய்துள்ள மேற்கத்திய நாடுகளுடன் முரண்பாடுகள் ஏற்படும் நிலையும் உருவாகும். இந்த ஒரே காரணத்தினால் அது போல் முரண்கள் ஏற்பட்டு, அந்நாடுகளின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுமானால், அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விருப்பதை நிறைவேற்றுவதற்கு சமம் என்பதை விட வேறு எதுவும் கூறமுடியாது.

கொத்து குண்டுகளைப் பயன்படுத்தியதாக ரஷ்யா மீது ஏற்கெனவே உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்திவரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கள் யுக்ரேன் மற்றும் அமெரிக்கா மீதும் சுமத்தப்படும் நிலை உருவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.