;
Athirady Tamil News

வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்

0

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார்.

இதற்கமைய இன்றைய தினம் சனிக்கிழமை பொருளாதார மத்திய நிலையத்துக்கு, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோர் பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அத்துடன் பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.