;
Athirady Tamil News

பவால் திரைப்படம் யூத இனப்படுகொலையை கேலி செய்கிறதா? சர்ச்சைக்கு உள்ளான காட்சி எது?

0

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் வருண் தவா நடித்த ‘பவால்’ என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் இருந்து நீக்க வேண்டுமென யூத அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது.

யூதர்களின் இனப்படுகொலை குறித்து அந்தத் திரைப்படத்தில் ‘அறிவற்ற முறையில்’ சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப் படத்தில் ‘கோடிக்கணக்கான மக்களை திட்டமிட்டு சித்ரவதை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும்’ மிக இலகுவாகக் காட்டப்பட்டுள்ளது என்று சைமன் வைசெந்தல் மையம் தெரிவித்துள்ளது.

காதல் நாடக பாணியிலான இந்தப் படத்தில் இனப்படுகொலை காட்டப்பட்டுள்ள விதம், இந்தியாவிலும் பல்வேறு தரப்பினருடைய விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஆனால் இந்த விமர்சனம் நியாயமற்றது என படத்தின் நடிகர்களும் இயக்குநரும் கூறியுள்ளனர்.

இந்தப் படத்திற்கு தற்போது இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இனப்படுகொலை குறித்து சரியாகத் தெரியாதவர்கள் அது குறித்துப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. ஹீரோவின் காதல் கதையை இனப்படுகொலையுடன் ஒப்பிடும் காட்சிகள் மற்றும் உரையாடல்களை சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

விஷ வாயு அறையைப் போன்ற கற்பனைக் காட்சியை உள்ளடக்கிய இந்தத் திரைப்படம் நாஜி தலைவரான ஹிட்லரையும் ஆஷ்விட்ஸ் மரண முகாமையும் ஓர் உருவகமாகப் பயன்படுத்துகிறது.

கதையின் முக்கிய வேடங்களில் பிரபல நடிகர்களான வருண் தவான், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். புதிதாக திருமணமாகி ஐரோப்பாவுக்கு செல்லும் தம்பதியாக இவர்கள் நடித்துள்ளனர்.

கதாநாயகன் ஒரு வரலாற்று ஆசிரியர். இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் இரண்டாம் உலகப் போர் குறித்து தனது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே அவரது நோக்கம். நாயகி தனது திருமண உறவு முறிந்து விடாமல் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களைக் கண்காணிக்கும் இணையதளம் ஒன்று ‘பவால்’ திரைப்படத்தை வணிகரீதியாக வெற்றிப் படமாக அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 60 முதல் 70 லட்சம் பேர் வரை அந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று, அமேசான் பிரமை தளத்தில் ‘டாப் டென் இந்தியா’ பட்டியலிலும் இந்தப் படம் இடம்பெற்றது.

படம் வெளியானதில் இருந்தே பல தவறான காரணங்களுக்காக இந்தப் படம் செய்திகளில் வந்துகொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெறவில்லை. பல விமர்சகர்கள் படத்தில் இனப்படுகொலை பற்றிய காட்சிகள், உரையாடல்கள் சரியாக இல்லையென்று கூறுகிறார்கள்.

ஒரு காட்சியில், மனித பேராசையை பிரதிநிதித்துவப்படுத்த ஹிட்லர் பயன்படுத்தப்பட்டார். ஜான்வி கபூர் நடித்த கதாபாத்திரத்தில், “நாம் எல்லோருமே சின்ன ஹிட்லர்தானே, இல்லையா?” என்று கேட்கிறார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் கதாநாயகி, “ஒவ்வோர் உறவும் அதன் ஆஷ்விட்ஸை(இனப்படுகொலை முகாம்) கடந்து செல்கிறது,” என்று கூறுகிறார்.

இந்தக் காட்சியில் நாஜி ஜெர்மனியில் சுமார் 10 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட மிகப்பெரிய மரண முகாம் மேற்கோள் காட்டப்படுகிறது.

வரலாற்றின் அந்த திகில் முகாம் படத்தில் உருவகப்படுத்தப்பட்டது. அங்கு அவர்கள் இருவரும் ஒரு விஷ வாயு அறையில் காட்டப்படுகிறார்கள். அவர்களைச் சுற்றியிருக்கும் மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, கதறுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

யூத மனித உரிமைகள் அமைப்பான சைமன் வெய்செந்தல் மையம், தீய சக்தியாக மனிதன் எந்த எல்லைக்குச் செல்வான் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஷ்விட்ஸை ஓர் உருவகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “இயக்குநர் நித்தேஷ் திவாரி, ஒவ்வோர் உறவும் அதன் ஆஷ்விட்ஸை கடந்து வருகிறது என்று கதாநாயகியை சொல்ல வைப்பதன் மூலம், 6 கோடி மக்களை இனப்படுகொலை செய்ததை கேலி செய்துள்ளார், அதிகாரத்தின் கைகளில் சித்ரவதை செய்யப்பட்டு, ஹிட்லரால் கொலை செய்யப்பட்டவர்களின் நினைவை இழிவுபடுத்தியுள்ளார்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

“நாஜி மரண முகாம்களின் கற்பனைக் காட்சிகளைப் படமாக்கி விளம்பரம் பெறுவதே இயக்குநரின் நோக்கமாக இருந்தது என்றால், அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமேசான் பிரைம் இந்தப் படத்தை வைத்து சம்பாதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அதைத் தனது இணையதளத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து பவால் படத்தின் இயக்குநர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்தி படங்களில் இடம்பெறூம் சிறிய விஷயங்களுக்கு மக்கள் பெரியளவில் பிரச்னை செய்வார்கள், ஆங்கிலப் படங்களில் இடம்பெறும் பெரிய விஷயங்களைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று வருண் தவான் முன்பு ஒரு முறை பேட்டியில் கூறியிருந்தார்.

ஒரு படத்தை மிக மிக நெருக்கமாக வைத்துப் பார்க்கக்கூடாது என்றும் அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் பிரச்னையைப் பார்க்க நேரிடும் என்றும் இயக்குநர் நித்தேஷ் திவாரி கூறியிருந்தார்.

இந்தப் படம் குறித்து இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகமும் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த இஸ்ரேல் தூதரகம், “இப்படிச் செய்ததில் தவறான நோக்கம் ஏதும் இருக்காது என நாங்கள் நம்புகிறோம். ஆனால், படத்தில் இனப்படுகொலை சரியான விதத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை,” என்று ட்வீட் செய்துள்ளது.

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனும் பவால் படத்தை நான் பார்க்கவில்லை, பார்க்க மாட்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், “இனப்படுகொலையின் கொடூரங்களைப் பற்றி அறியாதவர்கள், அதைப் பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றும்” அவர் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனும் பவால் படத்தை நான் பார்க்கவில்லை, பார்க்க மாட்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

“ஆனால், நான் படித்ததில் இருந்து படத்தில் இனப்படுகொலை மிகவும் பலவீனமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இனப்படுகொலை பற்றிய சித்தரிப்பு நம் அனைவரையும் மனதளவில் தொந்தரவு செய்யும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்றின் கொடூரத்தைப் பற்றி அறியாதவர்கள் அதைப் பற்றி படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தூதரகத்தை ஆதரித்து பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் ட்வீட் செய்துள்ளார். இந்த திரைப்படத்தை உருவாக்கியவர்கள் இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் உள்ள யூத மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தத் திரைப்படம் உணர்வற்றது, இனப்படுகொலையை சிறுமைப்படுத்த முயல்கிறது. அமேசான் பிரைம் அதைத் தனது தளத்திலிருந்து நீக்க வேண்டும்,” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“இது படிக்காத பாலிவுட் கோமாளிகளின் வேலை. இஸ்ரேலின் வலியும் வேதனையும் எங்களுக்குப் புரிகிறது,” என்று கூறுகிறார் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய்

பாஜகவின் முன்னாள் எம்.பி. தருண் விஜய்யும் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பவால் படம் குறித்து விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், “இது படிக்காத பாலிவுட் கோமாளிகளின் வேலை. இஸ்ரேலின் வலியும் வேதனையும் எங்களுக்குப் புரிகிறது.

இந்திய தணிக்கை வாரியம் நன்கு படித்த, உணர்திறன் வாய்ந்த அறிவாளிகளை உள்ளடக்கியது. அப்படியிருந்தும் அவர்கள் ஏன் இந்த ‘படத்தை’ அனுமதித்தார்கள்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1940 மற்றும் 1945ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தெற்கு போலந்தில் அமைந்திருந்த இந்த முகாமில் சுமார் 11 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் யூதர்கள்.

இந்த முகாமின் கட்டுமானம் 1940இல் தொடங்கப்பட்டது, 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருந்தது.

இந்த மரண முகாமில் ரோமோ ஜிப்சிகள், ஊனமுற்றோர், தன்பாலின ஈர்ப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், போலந்தில் வாழ்ந்த யூதர்கள் அல்லாதோர், சோவியத் யூனியனின் கைதிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று சோவியத் ஒன்றியத்தின் செம்படையால் விடுவிக்கப்பட்டது.

பிறகு 1947ஆம் ஆண்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதன் பராமரிப்புக்குப் பணம் வசூலிப்பதே பெரும் போராட்டமாக இருந்தது.

கைதிகளைக் கொல்வதற்கு முன் அவர்களுக்கு செய்யப்பட்ட சித்ரவதைகள், கொடுமைகள் தொடர்பான நினைவுகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணம் இந்த முகாமின் கொடூரமான சூழ்நிலையை விவரிக்கிறது.

இந்த ஆவணத்தில் முதல் யுக்ரேனிய முன்னணியின் 60வது படையின் ஜெனரல் கிராம்னிகோவின் அறிக்கையும் அடங்கும். அதன்படி, படையினர் இந்த மரண முகாமின் வாயிலைத் திறந்ததும் அங்கிருந்த ‘எண்ணற்ற மக்கள் கூட்டம்’ மரணத்தின் வாயிலில் இருந்து பிழைத்தது.

ஜெனரலின் கூற்றுப்படி, “அவர்கள் அனைவரும் மிகவும் சோர்வாகக் காணப்பட்டனர். முடி நரைத்த ஆண்கள், இளைஞர்கள், கைக்குழந்தைகளுடன் பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் அதில் அடக்கம். அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட அரை நிர்வாண நிலையில்தான் இருந்தனர்.”

“ஆஷ்விட்ஸில் இருந்த லட்சக்கணக்கான கைதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் கடைசி மூச்சு வரை சித்ரவதை செய்யப்பட்டனர், எரிக்கப்பட்டனர், சுடப்பட்டனர்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.