;
Athirady Tamil News

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு !!

0

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தை ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4.00 சதவீதத்திலிருந்து 2.00 சதவீதத்துக்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்திலேயே நாணயச் சபையானது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக மத்திய வங்கி, புதன்கிழமை (09) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில், வங்கித்தொழில் முறைமைக்குள் திரவத்தன்மையை உட்செலுத்தி, சந்தை திரவத்தன்மை பற்றாக்குறையை நிரந்தர அடிப்படையொன்றில் மேலும் குறைக்கும் நோக்குடன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நியதி ஒதுக்கு விகிதத்தில் இக்குறைப்பானது ஏறத்தாழ 200 பில்லியன் ரூபாயைக் கொண்ட திரவத்தன்மையை உள்நாட்டு பணச் சந்தைக்கு விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியங்களின் செலவில் ஏற்பட்ட குறைவின் விளைவாக சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் மேலும் கீழ்நோக்கிய சீராக்கமொன்றை இயலச்செய்து, அதன்மூலம் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சல்களில் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சந்தை கடன்வழங்கல் வீதங்கள் விரைவாக குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நியதி ஒதுக்கு விகித குறைப்பின் நன்மையை தாமதமின்றி அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மத்திய வங்கியானது சந்தை அபிவிருத்திகளை தொடர்ந்தும் கண்காணித்து தேவைப்படின் பொருத்தமான நிர்வாக வழிமுறைகளை எடுக்கும் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.