;
Athirady Tamil News

இந்தியா நடத்தும் ஜி20 மாநாடு: ரஷ்யா, சீனா அணுகுமுறையால் அமெரிக்கா கவலை!!

0

உலகளாவிய பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா தலைமைத் தாங்கி நடத்துகிறது.

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் வெற்றிகரமாக முடிக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா முயற்சித்து வருகிறது.

இருப்பினும் மாநாட்டையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதுநாள்வரை நடத்தப்பட்ட கூட்டங்களில் ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு ஜி 20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சீனா மற்றும் ரஷ்யாவின் அணுகுமுறையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் யுக்ரேன் போர், ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் சீனா, ரஷ்யா பக்கம் நிற்கிறது.

இத்தகைய சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்கும் முடிவை எடுத்துள்ளனர்.

இவ்விரு தலைவர்களின் இந்த முடிவால் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இதுதொடர்பான தனது கவலையை அமெரிக்காவும் தற்போது வெளிப்படுத்தி உள்ளது.

ஜி 20 கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற சிறு நம்பிக்கை அமெரிக்காவிற்கு இருப்பதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, “ஜி 20 உச்சி நாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதற்காக ஜி 20 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை எட்ட வைப்பது எவ்வளவு சிரமமான பணி என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுக்கும்,” என்று கிர்பை கூறியுள்ளார்.

மேலும், தனது தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதால், இதில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட இந்தியாவும் முயற்சிக்கும்.

அத்துடன் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பதன் மூலம், உலக அரங்கில் தன்னை சிறப்பான முறையில் நிலைநிறுத்தி கொள்ளவும் இந்தியா விரும்புகிறது.

மாநாட்டில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் சாதனையாகவே கருதப்படும்.

“மாநாட்டில் ஒத்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியாவும் விரும்புகிறது என்பதை நாங்கள் அறிவோம். இதில் அடுத்த என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,” எனவும் கிர்பை கூறியுள்ளார்.

மாநாட்டில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் சாதனையாகவே கருதப்படும்

ஜி 20 மாநாட்டில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் யுக்ரேன் போர் பெரும் தடையாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

“யுக்ரேன் போரின் காரணமாக, ஜி 20 நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அவ்வபோது பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

போர் விவகாரத்தில் பிற நாடுகளின் கோரிக்கைகளை ரஷ்யாவும், சீனாவும் கருத்தில் கொள்ளும் என்ற சிறு நம்பிக்கை உள்ளது. இத்தகைய சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று ஜான் கிர்பை கூறியுள்ளார்.

யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதை ரஷ்யா விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புதினும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கவில்லை

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புதினும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ஜி 20 மாநாட்டில் இதற்கு முன் சில நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் சில காரணங்களுக்காக பங்கேற்காமல் இருந்துள்ளனர்.

ஆனால், இக்கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டின் முக்கியத்துவம் கருதி பங்கேற்பார்கள் என்று எண்ணுகிறேன். அத்துடன் அவர்கள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டையும் மாநாட்டில் எடுத்துரைப்பார்கள் எனவும் கருதுகிறேன்,” என்று பதிலளித்தார்.

அத்துடன், “மாநாட்டையொட்டி எழுப்பப்படும் சில பிரச்னைகள் திடீரென தற்போது எழுந்தவையல்ல. இந்த பிரச்னைகள் ஏற்கனவே இருந்து வருகின்றன.

இவற்றில் ஒருமித்த கருத்துகளை எட்டுவதற்கு கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையில் கடந்த எட்டு, ஒன்பது மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. நீண்ட செயல் முறைக்குப் பிறகு உச்சி மாநாடு நடைபெற உள்ளது” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்

இந்தியா மீதான கோபத்தின் காரணமாக தான் ஜின்பிங் மற்றும் புதின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கவில்லையா என்று அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “ஜி 20 மாநாடு தொடர்பாக ஜின்பிங் மற்றும் புதின் எடுத்துள்ள முடிவுக்கும், இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன்” என ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

அத்துடன், ஷி ஜின்பிங் வேண்டுமானால், தற்போது முதல்முறையாக ஜி 20 மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கலாம்.

ஆனால், புதின் இதற்கு முன்பும் பலமுறை இம்மாநாட்டில் பங்கேற்காமல் இருந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் இணைய வழியில் தான் கலந்து கொண்டார் எனவும் ஜெய்சங்கர் பதிலளித்தார்.

ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்த சீனா விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இந்தியா முயற்சிப்பதாக கூறும் அரசியல் நிபுணர்கள் பலர், இந்தியாவின் இந்த முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்த சீனா விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

தெற்காசியாவின் தலைவராக சீனா தன்னை காட்டிக் கொள்ளும் நிலையில், அத்தகைய நிலையை இந்தியா எட்டிவிடக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நிபுணர்களின் இந்த கருத்துக்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார் தக்ஷசீலா நிறுவனத்தைச் சேர்ந்த சீன நிபுணரான மனோஜ் கேவல்ரமணி.

இதுகுறித்து அவர் ‘டெலிகிராஃப்’ நாளிதழிடம் கூறும்போது, “தெற்காசியாவின் தலைவர் என்று உலக அரங்கில் தன்னை இந்தியா சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜி 20 மாநாட்டில் சீனா சிறப்பாக பங்களிப்பை அளித்து வருகிறது” என்று கேவல்ரமணி கூறியுள்ளார்.

ஆனால், ஜி 20 கூட்டமைப்பை விட, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளை முன்னிலைப்படுத்த ஜின்பிங் முயற்சிக்கிறார் என்றும் டெலிகிரஃப் நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் சீனாவின் முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனாலும், இறுதியில் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இது சீனாவின் வெற்றியாகவே பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் மாநாட்டில் வேண்டுமானால் சீனாவும், ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம்.

ஆனால், டெல்லியில் நடைபெற்ற உள்ள ஜி 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்பதே சர்வதேச அரசியல் நிபுணர்களின் பார்வையாக உள்ளது.

எதிர்வரும் 2024 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆறு நாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

இந்தியாவை புறக்கணிக்கும் நோக்கில் சீனா இவ்வாறு செயல்படுகிறது என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை குறித்தும் ஆலோசித்தனர்.

இந்த நிலையில், ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை புரிந்தால், இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை இரு தலைவர்களும் தொடர்ந்து முன்னெடுக்க நல்வாய்ப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, புதிய தேச வரைப்படத்தை சீனா அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதில் அருணாசலப் பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பிடபூமி ஆகிய பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானவை என்ற பொருள்படி காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, சீன அதிபர் இந்தியா வருவதற்கான வாய்ப்பு தொடர்பாக கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ஷி ஜின்பிங் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்; சீன பிரதமர் லி சியாங் தலைமையிலான உயர்நிலை குழுதான் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

சீன அதிபர் இந்தியா வரவில்லை என்ற தகவல் தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

உலக அளவில் பெரிய கூட்டமைப்பாக கருதப்படும் ஜி 20 இன் அந்தஸ்தை குறைக்கும் நோக்கில், ஜின்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம் என்று ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் சீன அதிபர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று இந்தியாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள ஃபைனான்ஸ் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை புறக்கணிக்கும் நோக்கில் சீனா இவ்வாறு செயல்படுகிறது என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீன அதிபர் இந்தியா வரவில்லை என்ற தகவல் தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

சீனாவும், அமரிக்காவும் உலகின் இருபெரும் வல்லரசுகளாக திகழ்கின்றன.

இருப்பினும் யுக்ரேன் போர், தைவான் விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

அண்மையில் தனது வான் எல்லையில் பறந்த சீனாவின் ஆளில்லா பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அதை சீனாவின் உளவுப் பார்க்கும் வேலை என்றும் அமெரி்க்கா குற்றம் சுமத்தியிருந்தது.

ஆனால், ஆளில்லா பலூன் அமெரிக்க வான் எல்லையை அடைந்தது ஒரு விபத்து என்று சீனா கூறியது. சீனாவின் இந்த சமாதான வார்த்தைகளை அமெரிக்கா ஏற்காததையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜின்பிங் இந்தியா வராததும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் சந்திக்க வாய்ப்பில்லை என்பதும் அனேகமாக உறுதியாகிவிட்டது.

ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருந்தால், அது உலக அரங்கில் இந்தியா தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள நல்வாய்ப்பா அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிnd கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங், தனது அரசியல் ஆளுமையையும் நிரூபித்தார்.

ஆனால், டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்காததன் மூலம், இந்த மாநாட்டுக்கு சீனா எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற செய்தியை அந்நாடு உலகிற்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அண்மையில் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இரு துருவங்களால் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், ஜி 20 மாநாட்டி்ல் சீன அதிபர் பங்கேற்காமல் இருந்தால், அது உலக அளவில், வளரும் நாடுகளின் தலைமையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இந்தியாவின் முயற்சியில் தோய்வை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்காத நிலையில்,இந்தியா தற்போது மேற்கத்திய நாடுகளை விட அதன் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியும்.

அதை அடைவதில் பெரிய அளவிலான பங்கையும் வகிக்க முடியும் என்று அரசியல் நிபுணர்கள் நேர்மறையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடுவதில் கூட்டமைப்பு நாடுகள் சிரமத்தை எதிர்கொண்டன.

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு, கடந்த ஆண்டு இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்றது. யுக்ரேன் போர் விவகாரம் காரணமாக, அந்த மாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிடுவதில் உறுப்பு நாடுகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டன.

ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது பாலி மாநாட்டில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ரஷ்யா- யுக்ரேன் போரின் விளைவாக, இவ்விரு பிரிவு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் கடந்த ஓராண்டில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தை முன்வைத்து டிஜிட்டல் யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வர்த்தகப் போரில் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சீனா மற்றும் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகின்றன.

ரஷ்யா -யுக்ரேன் போர், அமெரிக்கா – சீனா வர்த்தக யுத்தம் போன்ற நெருக்கடியான சூழலில், ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, இந்த உச்சி மாநாட்டில் வளரும் நாடுகளின் பிரச்னைகளை எழுப்புவதே இந்தியாவின் முன்னுரிமையாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.