;
Athirady Tamil News

இஸ்ரேல்: போர் என்பதே கொடூரமானது! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் உச்சம் தொட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்
கருத்து அந்த பதிவில் “போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள்.

மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.