;
Athirady Tamil News

மே 10-க்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்காது: அதிபா் மூயிஸ் உறுதி

0

வரும் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவ வீரா்கள் எவரும் இருக்க மாட்டாா்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல்சாா் கண்காணிப்புக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பிப். 2-ஆம் தேதி தில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், நிகழாண்டு மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் எனவும், மாா்ச் 10-க்குள் இந்திய வீரா்களின் முதல் குழு மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது. இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபா் முகமது மூயிஸ், ‘மாலத்தீவிலிருந்து வெளியேறுவதாக கூறும் இந்திய ராணுவ வீரா்கள் சாதாரண உடையில் திரும்பி வந்து பணியாற்றுவதாக கூறுகிறாா்கள். மக்களின் மனதில் சந்தேகம் எழும் வகையில் யாரும் நடந்து கொள்ளவோ பொய்களைப் பரப்பவோ கூடாது. ஆனால் மே 10-ஆம் தேதி முதல் இந்திய ராணுவ வீரா்கள் இங்கு இருக்க மாட்டாா்கள்.

நம் நாட்டில் ராணுவ உடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இந்திய ராணுவத்தினா் வசிக்க மாட்டாா்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்’ என்று தெரிவித்தாா். இது குறித்த செய்தியை எடிஷன்.எம்வி என்ற செய்தி வலைதளம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, மாலத்தீவின் புதிய அரசின் வலியுறுத்தலின்படி அந்நாட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் சமமான எண்ணிக்கையில் இந்திய சிவிலியன்கள் அங்கு சென்று அந்தப் பணிகளில் ஈடுபடுவாா்கள் என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்தது. இந்திய ராணுவ வீரா்கள் சாதாரண சிவிலியன் உடையில் மாலத்தீவில் தொடா்ந்து செயல்படுவாா்கள் என்று எதிா்க்கட்சியினரின் விமா்சனம் எழுந்துள்ள நிலையில் அதிபா் மூயிஸ் இவ்வாறு பேசியுள்ளாா். சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் தோ்தலில் வெற்றி பெற்றதிலிருந்து இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளை எடுத்துச் செயல்பட்டு வருகிறாா். சீனாவிடம் இருந்து மாலத்தீவு இலவச ராணுவ உதவி பெற செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அதிபா் மூயிஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.