;
Athirady Tamil News

மூன்று அச்சுகளில் சுழலும் பிரசார களம்

0

தமிழகத்தில் அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் பிரசாரம் மூன்று அச்சுகளில் சுழல்கிறது. முதலில் யாருக்கு இடையே போட்டி என்பதே பிரதானமாக உள்ளது. இதற்குத் தொடக்கப் புள்ளி அமைத்தவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனலாம்.

2023 அக்டோபரில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் திமுக – பாஜகவுக்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்று கூறினார். அதே கருத்தை மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது அவரும் தொடர, அது மற்ற கட்சிகளையும் பற்றிக் கொண்டது. பாஜக மூத்த நிர்வாகிகளும் திமுக – பாஜக இடையேதான் போட்டி என்று அண்ணாமலையின் கருத்தை முன்மொழிந்து வருகின்றனர்.

திருச்சியில் மார்ச் 24-இல் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்குப் பதிலளிக்கும் வகையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார். அவரைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் அவ்வப்போது பிரசாரத்தில் அதை முன்மொழிந்து வருகின்றனர்.

பாஜக – அதிமுகவின் இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நுழையாவிட்டாலும், திமுகவின் அடுத்த நிலை தலைவர்கள் நுழைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் மார்ச் 25-இல் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி, திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார். பிற திமுக தலைவர்களும் இந்தக் கருத்தை வழிமொழிந்து வருகின்றனர்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காததுபோல, இந்த விவகாரத்திலும் நாம் தமிழர் கட்சி பிற கட்சிகளில் இருந்து விலகியே உள்ளது. அதனால், களத்தில் நான்காவது அணியாக “நாம் தமிழர்’ இருப்பது வெளியில் தெரியவில்லை. “நாம் தமிழர்’ வேட்பாளர்களுக்கு கிடைக்க இருக்கும் வாக்குகள்தான் ஒருவேளை வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்கிற நிலைமை ஏற்பட்டாலும் வியப்படையத் தேவையில்லை.

பொதுவாகத் தேர்தல் என்றாலே போட்டிதான். இந்தத் தேர்தலில் எந்த அணிகளுக்கு இடையே போட்டி என்பதே பெரும் போட்டியாக உள்ளது.

புகைப்பட பிரசாரம்: எந்த அணிகளுக்கு இடையே போட்டி என்கிற விவாதத்துக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காவிட்டாலும், அதிமுக – பாஜகவுக்கும் இடையே கள்ளக் கூட்டணி என்கிற விவாதத்தை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் பிரசாரத்தின்போதும் தொடங்கி வைத்தார். அதற்கு, எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டியது திமுக. ஆளும்கட்சியான பிறகு, பிரதமரை முதல்வரே நேரில் போய் வரவேற்கிறார். அப்படியானால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது யார் என்று பதில் கேள்வி எழுப்பினார். அதோடு, இன்னொரு விவாதத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று உதயநிதி செங்கல்லை தொடர்ந்து இங்கே காட்டி வருகிறார். அதே கல்லை நாடாளுமன்றத்தில் காட்டியிருந்தால், இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனையையே கட்டியிருக்கலாம் என்றார்.

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமரோடு எடப்பாடி பழனிசாமி இருக்கும் படத்தை மக்களிடம் காட்டி, நானோ கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கல்லைத்தான் காட்டினேன்.

நீங்களோ பிரதமரிடம் பல்லைக் காட்டுகிறீர்கள் என்றார்.

எடப்பாடி பழனிசாமியும் விடவில்லை. தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரிடம் சிரித்துப் பேசியதில் என்ன தவறு இருக்க முடியும் என்றவர், பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் இருக்கும் படத்தையும் காண்பித்து, நீங்கள் சிரிக்கவில்லையா என்றார்.

உதயநிதியும் விடவில்லை. வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்துக்குப் பிறகு சசிகலாவை வணங்கியதன் புகைப்படத்தைக் காண்பித்தார்.

அதற்கு மதுரையில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி, பெரியவர்கள் காலில் விழுவது தவறா என்றார். இந்தத் தலைவர்களைத் தொடர்ந்து வேட்பாளர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைக் காட்டி பிரசாரம் செய்யும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இது எல்லாப் போட்டிக்கும் மேலாக போட்டோ போட்டியாக உள்ளது.

கச்சத்தீவு விவகாரம்: மூன்றாவதாக களம் 1974-க்குத் திரும்பியுள்ளது. முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு பிரதமர் இந்திரா காந்தி தாரை வார்த்தார் என்று அண்ணாமலை பழைய விவகாரத்தின் திரியை மீண்டும் பற்ற வைத்துள்ளார். மேலும், 1976-இல் தமிழக மீனவர்களுக்கு இருந்த மீன் பிடி உரிமை குறித்த ஷரத்தும் யாருக்கும் தெரியாமல் நீக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதே கருத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் கூறியுள்ளார். பிரதமர் மோடியும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்துக்கு முதல்வர் நேரடியாகப் பதில் அளிக்காமல், 10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு,

தேர்தலுக்காக மீனவர்கள் மீது பிரதமருக்கு திடீர் பாசம் வந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவின் பிற தலைவர்கள் மீனவர்கள் விவகாரத்தில் பாஜக திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருவதாகக் கூறி வருகின்றனர்.

இப்படியாக மூன்று அச்சுகளில் சுழலும் தேர்தல் களத்தில், “நாம் தமிழர்’ கட்சி ஓரங்கட்டப்படுமா இல்லை, வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்குமா என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.