ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 41 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் கேஸ் டேங்கர் வாகனத்தோடு, பல வாகனங்கள் மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்தன. விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தபோது, கிட்டத்தட்ட ஒரு கி.மீ தொலைவில் இருந்து தீப்பிழம்புகளை கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, முறையான சிகிச்சையை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார்.
“ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் பலியானோர் பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், எஸ்எம்எஸ் மருத்துவமனைக்குச் சென்று, உடனடியாகத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜூ ஜார்ஜ் ஜோசப் மற்றும் துறையின் மற்ற அதிகாரிகள் நெடுஞ்சாலையில் சம்பவ இடத்தில் இருந்தனர்” என முதல்வர் பஜன்லால் சர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.