;
Athirady Tamil News

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகவிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 3ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர்.

வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழப்பு
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 மற்றும் 50 வயதுடைய ஆண்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரில் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த 38 வயதுடைய பெண் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த பெண் பிறிதொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குப் பிரவேசித்தவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பிச்சென்ற சந்தேகநபர்கள்

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை இந்த தாக்குதல் சம்பவமானது, 2022ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் நடைபெற்ற படுகொலைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்த ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.