பிரித்தானியாவில் சில AI Tools-க்கு தடை., குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் அமுல்

குழந்தைத் துஷ்பிரயோக படங்களை உருவாக்கக்கூடிய AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு, செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலம் குழந்தைத் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதைத் தடை செய்யும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த வகையில் சட்டத்தை அமுல்படுத்தும் முதல் நாடாக பிரித்தானியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
AI மூலம் குழந்தைத் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
Internet Watch Foundation அறிக்கையின் படி, 2024-ஆம் ஆண்டில் AI மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைத் துஷ்பிரயோகப் படங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன.
“Nudeify” தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளின் உண்மையான புகைப்படங்களை மாற்றி வடிவமைக்கும் செயல்முறைகள் அதிகரித்துள்ளன.
இது மனிதவியலுக்கும், சமூக நலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய சட்டம் – முக்கிய அம்சங்கள்
AI மூலம் குழந்தைத் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவது, பகிர்வது, வைத்திருப்பது அனைத்தும் குற்றமாகும்.
“AI paedophile manuals” எனப்படும் குழந்தைத் துஷ்பிரயோகம் தொடர்பான வழிகாட்டி புத்தகங்களை வைத்திருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
Crime and Policing Bill மூலம் இது சட்டமாக அமையும்.
குழந்தை துஷ்பிரயோகப் படங்களை பகிரும் இணையதளங்களையும் முடக்க புதிய அதிகாரங்களை அரசு பெற உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய சட்டங்களை அமுல்படுத்தும் முயற்சி
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் யவெட் கூப்பர் (Yvette Cooper), “ஓன்லைன் துஷ்பிரயோகம் நேரடி வாழ்க்கையில் குழந்தைகளை பாதிக்க வழிவகுக்கிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், “deepfake” தொழில்நுட்பத்தைக் கொண்டு துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவது குற்றமாக்கப்பட்டிருந்தது. இப்போது AI மூலம் குழந்தைகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களும் புதிய சட்டத்திற்குள் வரும்.
இது AI தொழில்நுட்பத்திற்கான ஒழுங்குமுறைகளை கட்டுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.