கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தலத்தின் 130வது வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தலத்தின் 130வது வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(18.02.2025) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1895ம் ஆண்டு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சு மோசேஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாலைதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடலாக இது நடைபெற்றது.
இதன்போது, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழாவிற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
திருவிழாவானது எதிர்வரும் 19.03.2025ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 21.03.2025ம் திகதி நற்கருணைவிழாவும், தொடர்ந்து 22.03.2025ம் திகதி திருவிழாவுடன் நிறைவுபெறும்.
இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, பூநகரி உதவி பிரதேச செயலாளர் பா.கிரிஜா,
பாதுகாப்புப் படை கடற்படையினர், மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி அ.பெ. ப.பெனற் அடிகளார், பங்குத்தந்தை அருட்பணி ஹென்றி எரோணியஸ் அடிகளார், பூநகரி பங்குத்தந்தை அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளார் பிராந்திய சுகாதார பணிப்பாளர், வேரவில் வைத்தியசாலை வைத்தியர், பூநகரி பிரதேச சபை செயலாளர், கிராம சேவையாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கலாசார உத்தியோகத்தர்கள், வேரவில் மற்றும் வலைப்பாடு மீனவ சங்க உறுப்பினர்கள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பழமை வாய்ந்ததும், வரலாற்று சிறப்புமிக்கதும், பல்லாயிரம் பக்தர்களுக்கு நல்லருள்பாலிப்பவருமான பாலைதீவு தூய அந்தோனியாரிடம் மண்டைதீவு, குருநகர், அல்லைப்பிட்டி, வலைப்பாடு, பாஷையூர், மன்னார், புத்தளம், நீர்கொழும்பு, இரணைதீவு, நாவாந்துறை போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி புனித அந்தோனியாரின் அருளினை பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.



