;
Athirady Tamil News

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

0

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடமிருந்து சிறைப்பிடித்துள்ள பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு பதிலாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஓர் பகுதியாக ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உயிரிழந்த இஸ்ரேலியர்களான ஷிரி பிபாஸ் (வயது 33) , அவரது இரு குழந்தைகள் மற்றும் ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்கள் சா்வதேச செஞ்சிலுவைச் இயக்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் கடந்த பிப்.20 அன்று ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இஸ்ரேலில் நடத்தப்பட்ட சோதனையில் ஷிரி பிபாஸின் உடலைத் தவிர மற்ற மூவரது அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஷிரி பிபாஸின் உடலுக்கு பதிலாக உயிரிழந்த வேறொரு பாலஸ்தீனப் பெண்ணின் உடலை ஹமாஸ் படையினர் ஒப்படைத்திருப்பதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொடூரமான மற்றும் தீங்கிழைக்கும் வகையில் மீறியதாகக் குற்றம் சாட்டியதுடன் இதற்கு அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் அவர் சபதம் செய்தார்.

மேலும், நேற்று முன்தினம் (பிப்.21) ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை இயக்கத்திடம் தாங்கள் ஓப்படைத்தது அப்பெண்ணுடைய சரியான உடல் தான் என்று கூறியிருந்த நிலையில் நேற்று (பிப்.22) இஸ்ரேலில் நடத்தப்பட்ட அடையாளம் காணும் சோதனையில் ஒப்படைக்கப்பட்ட உடலானது ஷிரி பிபாஸினுடையது தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

இந்த விவகாரங்களுக்கு இடையில் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நேற்று (பிப்.22) மற்றொரு பிணைக் கைதிகளின் குழுவானது பாலஸ்தீன சிறைவாசிகளுக்கு பதிலாக ஒப்படைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.