;
Athirady Tamil News

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார்? குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்

0

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில், மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி ஞானசேகரன் பேசியதாக, மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார்.

யார் அந்த சார் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், வழக்கில் இன்னொரு நபருக்கு தொடர்பு உள்ளது அவரை கண்டுபிடிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

குற்றப்பத்திரிகை
தற்போது, சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில், “பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு படிக்கட்டில்அமர்ந்து பேசிகொண்டுள்ளனர்.

மாலை 7.10 மணியளவில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு தொப்பியை அணிந்து முகத்தை மறைத்து, ஞானசேகரன் நுழைந்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றியுள்ளார்.

மாணவியை அச்சுறுத்த நடிப்பு

மாணவியின் நண்பரை தாக்கிய பின், அவர்களின் அடையாள அட்டையை பறித்துள்ளார். அதன்பின் இருவரையும் வீடியோ எடுத்து டீன், வார்டன் ஆகியோரிடம் காட்டப்போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது இருவரும் கெஞ்சியதையடுத்து, மாணவரை அங்கிருந்து அனுப்பி விட்டு, மாணவியை தனியாக அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

மாணவி பெற்றோரின் அலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு, தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என கூறியுள்ளார்.

தனக்கு பல்கலைகழகத்தில் அதிகாரம் இருப்பது போன்று காண்பிப்பதற்காக, மாணவியை அச்சுறுத்துவதற்காக, ஞானசேகரன் ‘சார்’ என அழைத்து ஒரு நபரிடம் பேசுவது போல் நடித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.