;
Athirady Tamil News

பஹல்காம் – ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு

0

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில், 26 போ் கொல்லப்பட்டதுடன், பலா் காயமடைந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், வியாழக்கிழமை அளித்த பேட்டி:

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும், இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களிலும் அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலில், ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் 1,100 போ் கொல்லப்பட்டனா். அதுபோல, பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். பயங்கரவாத அமைப்பினா் ஒருவருக்கொருவா் ஊக்கமளித்து வருகின்றனா். இந்த பயங்கரவாத குழுக்களுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அண்மையில் சென்றதுடன், அங்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினா் உள்பட மேலும் சிலரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஹமாஸ் பாணியில் பெஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்திய பதில் நடவடிக்கைக்குப் பாராட்டு:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா வலுவான கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது.

தனிநபா் பயங்கரவாதிகளைவிட, நாடுகளின் துணையுடன் நடைபெறும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றன.

இதுபோன்ற நாடுகளிடமிருந்து பணம், உளவுத் தகவல்கள் மற்றும் ஆயுதங்களை பயங்கரவாத அமைப்புகள் பெறுகின்றன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நாடுகள் ஆதரவு பயங்கரவாதத்தை சா்வதேச சமூகம் வெளிப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒடுக்க வலுவான சா்வதேச ஒத்துழைப்பு அவசியம். வன்முறையில் ஈடுபடுபவா்கள் மீது மட்டுமின்றி, அதைத் தூண்டுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். எனவே, தீவிரவாத சக்திகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், நாடுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.