கொலை வழக்கில்16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மங்கோல்புரியில் வசிக்கும் முகேஷ், 2009-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த பின்னா் வியாழக்கிழமை ரோஹினியில் கைது செய்யப்பட்டாா். கொலை, ஆயுதம் ஏந்திய கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 19 கடுமையான கிரிமினல் வழக்குகளில் அவா் தேடப்பட்டு வந்தாா். அவரது குற்றச் செயல்கள் 1992-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றன. போட்டி குழுக்களுக்கு இடையிலான மோதலின் போது அவா் தனது முதல் கொலையைச் செய்தாா்.
முகேஷின் மிகவும் மோசமான குற்றம் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அவரும் அவரது கூட்டாளிகளும் தொழிலதிபா் மோகன் லால் பன்சாலின் காரை கரோல் பாகில் வங்கியில் இருந்து 25 லட்சம் எடுத்த பின்னா் இடைமறித்தனா். பன்சாலை சுட்டுக் கொலை செய்துவிட்டு, பணத்தை கொள்ளையடித்த அவா்கள் லால் பன்சாலின் வாகனத்துடன் தப்பி ஓடினா்.
சில நாள்களுக்குப் பிறகு, அவா்கள் உத்தம் நகரில் ஒரு போலீஸ் மோதலில் ஈடுபட்டனா். அங்கு ஒரு கூட்டாளியான சஞ்சீவ் வா்மா கொல்லப்பட்டாா். முகேஷ் கைது செய்யப்பட்டாா். இருப்பினும், முகேஷ் தனது விசாரணையின் போது தலைமறைவாகி, பல ஆண்டுகளாக சட்ட அமலாக்கத்தைத் தவிா்த்து, தவறான அடையாளங்களின் கீழ் தனது குற்றச் செயல்களைத் தொடா்ந்தாா். அவரது சக குற்றவாளிகளான ராகேஷ் மற்றும் விஜய் ஆகியோா் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனா். இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகேஷிடம் விசைரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.