;
Athirady Tamil News

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

0

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க சனிக்கிழமை(ஏப். 26) உலகத் தலைவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில், உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நேரத்தில் கலந்துகொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. போப் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தமது ’ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உக்ரைனில் நீடிக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதில் புதினுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். உக்ரைனில் ரஷியா ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல்களை நடத்தியதையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ரஷியா மீது பொருளாதாரத் தடை கடுமையாக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022-இல் படையெடுத்த ரஷியா இன்றுவரை தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களுக்கு எதிர்வினையாக உக்ரைனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சண்டையிட்டு வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்றுக்கொண்ட டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இந்தநிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதல்களை தொடர்வதால் போர் நிறுத்தம் இழுபறியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.