கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
16-ஆம் நூற்றாண்டில், பிலிப்பின்ஸில் படையெடுத்த ஸ்பெயின் நாட்டவா்களுக்கு எதிராகப் போரிட்ட தேசிய வீரரான லாபு-லாபு நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 27-ஆம் தேதி லாபு-லாபு தினம் அந்நாட்டு மக்களால் கலாசார திருவிழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், கனாடாவின் வான்கூவரில் பெரும்பான்மை புலம்பெயா் சமூகமான பிலிப்பின்ஸ் சமூகத்தினா், நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தெருவில் லாபு-லாபு தின விழா கொண்டாடத்துக்காக சனிக்கிழமை இரவு கூடியிருந்தனா்.
அப்போது, இதே நகரைச் சோ்ந்த 30 வயது இளைஞா், கூட்டத்துக்குள் தனது காரை அதிவேகமாக ஓட்டினாா். காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சனிக்கிழமை இரவு 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் காரை ஓட்டிய இளைஞா் உடனடியாக கைது செய்யப்பட்டாா். நகர குற்றப் பிரிவு காவல் துறையினா் சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், இச்சம்பவத்துக்கு பயங்கரவாத தொடா்பு எதுவும் இல்லை என்று நம்புவதாக காவல் துறை தெரிவித்தது.
இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா். வான்கூவா் மேயா் கென்னத் சிம் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘லாபு-லாபு தின கொண்டாடத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தால் அதிா்ச்சியும்; வருத்தமும் அடைந்துள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வான்கூவரின் பிலிப்பின்ஸ் சமூகத்தினருக்கும் எனது இரங்கல்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேசிய தரவுகளின்படி, வான்கூவா் நகரின் மொத்த மக்கள்தொகையில் 5.9 சதவீதமாக (38,600 போ்) பிலிப்பின்ஸ் சமூகத்தினா் உள்ளனா்.