நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் விபத்தில் கப்பலின் மூன்று கம்பங்களும் உடைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து மெக்சிகன் கடற்படை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், கப்பலில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 19 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், யாரும் தண்ணீரில் விழாததால் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் எக்ஸ் தளத்தில், 142 ஆண்டுகள் பழமையான பாலம் பெரிய சேதத்திலிருந்து தப்பியதாகவும், கப்பலில் இருந்த 277 பேரில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஐஸ்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நியூயார்க் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.