48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்; ஈரானுக்கு டிரம்ப் கெடு
வாஷிங்டன்,
வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் பயங்கர போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து, அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருகின்றன. இதனால் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
இந்த பயங்கர போரில் தங்கள் உச்சபட்ச தலைவரை முதல் நாளிலேயே இழந்ததுடன், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் பறிகொடுத்த ஈரான், ஆனாலும் சளைக்காமல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘அயர்ன் டோம்’-ஐ தாண்டி, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் கொத்துக்குண்டுகள் அந்த நாட்டை பதம் பார்த்து வருகின்றன. இதில் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.
மறுபுறம், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளையும் விடாமல் ஈரான் தாக்கி வருகிறது. இதில் அந்த நாடுகளின் எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி, விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில், ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரானின் கடற்படை, விமானப்படை அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு புதிய கெடு ஒன்றை டிரம்ப் விதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: “ஈரான் எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக திறக்க வேண்டும். இல்லையெனில், ஈரானின் பல மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி முற்றிலும் அழித்துவிடும். மிகப்பெரிய மின் நிலையத்திலிருந்து தாக்குதல் தொடங்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.