;
Athirady Tamil News

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தியைத் தடுக்கவே போட்டியிட்டேன் – எம்.கே.சிவாஜிலிங்கம்!

0

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கள் தவிசாளாக செல்ல போகிறீர்களா? என கேட்டார்கள். எனக்கு தனிப்பட்ட கௌரவம் முக்கியம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினராக செல்லும் போது நான் ஏன் செல்ல முடியாது.

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் தொல்லை தந்தார்கள். இவர்களை தலை எடுக்கவிடக்கூடாது என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவரது தேசிய மக்கள் சக்தி கட்சியினருக்கு சொல்லியதாக நாம் அறிகிறோம். தேசிய மக்கள் சக்தி எங்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முடிவுகளை எடுக்கலாம்.

வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா தெரிவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் தேசிய மக்கள் சக்தி வாக்களிப்பதை தடுக்க முடியாது.
இலங்கைத் தமிழ் அரசு கட்சி போட்டிக்கு வந்தால் அவர்களாக வாக்களித்தார்கள் என்று நீங்கள் பொய் சொல்வீர்கள். தேசிய மக்கள் சக்தி வேண்டுமென்றால் போட்டிபோட்டு பார்க்கட்டும்.

எமது தமிழ் தேசிய பேரவைக்கு எந்த போனஸ் ஆசனங்களும் கிடைக்கவில்லை. வட்டாரத்தில் தெரிவான ஏழு பேருமே எனக்காக பதவிவிலக தயாராக இருக்கிறார்கள். ஆகவே நான் விரைவில் சபைக்கு செல்வேன். நான் நான்கு வருடமும் தொடர்ந்து இருக்க மாட்டேன். இளைஞர்களை பயிற்சிவிப்பதற்காக ஒரு வருடம் இருந்துவிட்டு தலைமையை இளைஞர்களிடம் கொடுத்து விட்டு செல்வேன்.

இம்முறை மாகாண சபை தேர்தலில் முதலமைச்சரை அடைவதற்காக தேசிய மக்கள் சக்தி போராடும். ஆனால் இதனை தடுக்க தமிழ் தேசியத் தரப்புக்கள் அணி திரண்டு செயல்பட வேண்டும்.இலங்கை தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய தரப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மனதில் இருந்த வேணவாவை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்களை திசைகாட்டிப் பக்கம் தள்ளாதீர்கள். இந்த தேர்தலில் வென்ற சபைகளை மிக ஒற்றுமையாக சுமூகமாக நடத்திக் காட்டுவோமாக இருந்தால் மாத்திரமே மக்கள் எதிர்வரும் காலங்களிலும் எமக்கு பின் அணி திரள்வார்கள்.

நாங்கள் மிகப் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் பதவிக்காக சண்டையிடாமல் விட்டுக் கொடுப்புடன் இந்த தமிழினத்தின் ஒற்றுமைக்காக அனைத்து கட்சிகளும் பங்களிக்க வேண்டும் – என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.