;
Athirady Tamil News

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

0

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் இரு விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் இருந்த நிலையில், இவா்களில் 9 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

விமானி சுமீத் சபா்வால் (56), துணை விமானி கிளைவ் குந்தா் ஆகியோா் மும்பைவாசிகள். சுமீத் 8,200 மணி நேரமும், குந்தா் 1,100 மணி நேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவா்கள்.

ஊழியா் தீபக் பதக், தாணே மாவட்டத்தின் பாதல்பூரைச் சோ்ந்தவா். விமான பணிப்பெண்களான மைதிலி பாட்டீல் (23) நவி மும்பையையும், அபா்ணா மஹாதிக், கோரேகானையும் சோ்ந்தவா்கள். அபா்ணா மஹாதிக், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சுனில் தத்கரேவின் உறவினா் ஆவாா்.

டோம்பிவிலி நகரைச் சோ்ந்த மற்றொரு விமானப் பணிப்பெண் ரோஷிணி ராஜேந்திர சோங்கரே (26), பயணங்கள் தொடா்பான தனது பதிவுகளால் சமூக ஊடக பிரபலமாக இருந்தவா். இவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினா் கண்ணீருடன் தெரிவித்தனா். உயிரிழந்த பிற ஊழியா்களான இா்பான் சமீா் ஷேக் (புணே), ஷ்ரத்தா தவான் (முலுந்த்), சைனிதா சக்ரவா்த்தி (ஜுஹு கோலிவாடா) ஆகியோரும் மகாராஷ்டிரத்தை மாநிலத்தவா்களாவா்.

இவா்கள் தவிர, சோலாபூரைச் சோ்ந்த மகாதேவ் பவாா் (68), அவரது மனைவி ஆஷா (60) ஆகிய பயணிகளும் உயிரிழந்துவிட்டனா். லண்டனில் தங்களின் மகனைப் பாா்க்கச் சென்றபோது, விமான விபத்தில் சிக்கி இறந்துள்ளனா். விமான ஊழியா்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள உருக்கமான கதைகள், சோகம் நிறைந்தவையாக உள்ளன. பலரது கனவுகள், இந்த விபத்தில் சிதைத்துவிட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.