அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு சம்பவம்! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத் விபத்துக்கு பிறகு 38 மணிநேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானம் 900 அடி உயரத்தில் இருந்து தரையை நோக்கி கீழே வந்துள்ளது.
எனினும், விமானிகள் மீண்டும் விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளில் மேலே பறக்க முடியாமல் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 241 பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அந்த விபத்து நடந்து 38 மணிநேரத்தில் அதேபோன்ற மற்றொரு விபத்து தவிர்க்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஏஐ 187 விமானம்
ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 2.56 மணிக்கு தில்லியில் இருந்து வியன்னா நோக்கி ஏர் இந்தியாவின் ஏஐ 187 விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் 900 அடி உயரத்தை எட்டியவுடன் திடீரென்று தரையை நோக்கி கீழே வந்ததற்கான ஜிபிடபள்யூஎஸ் எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
இருப்பினும் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்த விமானிகள், வியன்னாவை நோக்கி பயணம் செய்து பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை முடியும் வரை ஏஐ 187 விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் விமானங்களை இயக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.