தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமும் புள்ளிவிபரத் தரவுகளை இற்றைப்படுத்தியதில் முன்னிலை வகித்துள்ளது – அரசாங்க அதிபர் பெருமிதம்
தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (08.07.2025) காலை 09.00 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுச் நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இதுவரை நடைபெற்ற தொகைமதிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட மாவட்ட பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதேச புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் தனது பாரட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமும் புள்ளிவிபரத் தரவுகளை இற்றைப்படுத்தியதில் முன்னிலை வகித்துள்ளதாக பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தொகைமதிப்பு நடவடிக்கைகளை விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத தரவுகள் என வகைப்படுத்தி இவ் வருடத்தை விவசாயம் சார்ந்த தொகைமதிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இத் தரவுகள் தேசிய ரீதியாக மொத்த தேசிய வருமானத்தில் மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு செய்வதால் வகை மற்றும் தொகை ரீதியான இவ்விபரங்கள் உரிய காலத்தில் அல்லது அதற்கு முன்னர் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுமென வலியுறுத்தி தெரிவித்ததுடன் இச் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்ள அனைவரது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதிப் பணிப்பாளர் (மாகாண இணைப்பாளர்) அனுருத்த வீரதுங்க, சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர் (வளவாளர்) எஸ்.தனபாலசிங்கம், தொகைமதிப்பு புள்ளி விபரத் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம். வித்தியானந்தநேசன், மாவட்ட விவசாய ப் பணிப்பாளர் பி. பவலீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், தொகைமதிப்பு புள்ளி விவர திணைக்கள மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




