;
Athirady Tamil News

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

0

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.