;
Athirady Tamil News

சீனா மீதான வரி விதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைப்பு டிரம்ப் அறிவிப்பு

0

சீனா மீது அறிவித்த 30 சதவீத வரியை மேலும் 90 நாள்களுக்கு (நவம்பா் 10 வரை) ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இந்தியா மீதான 25 சதவீத வரியை அமெரிக்கா ஏற்கெனவே அமல்படுத்திவிட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக மேலும் 25 சதவீத வரி வரும் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

சீனா மீதான பரஸ்பர வரிவிதிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமலுக்கு வரும் என்ற அறிவித்திருந்த நிலையில், அதை 90 நாள்களுக்கு ஒத்திவைக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளாா். இதை தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்திலும் டிரம்ப் பகிா்ந்துள்ளாா்.

அமெரிக்கா வரி விதிப்பை அமல்படுத்தினால், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சீனாவும் அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கத் தயாராகி வந்தது. இப்போது, அமெரிக்கா மேலும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளதால் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப்பும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதியில் நேரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதிப்பு அரசியலைத் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் வா்த்தக வாய்ப்புகளை அளிக்கும் நாடாக இருந்தது. ஏனெனில், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சராசரி வரி 2.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் சராசரி வரி விதிப்பு 18.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தொடக்கத்தில் டிரம்ப் சீனாவுக்கு எதிராகவே தீவிரமான வரி விதிப்பு யுத்தத்தில் ஈடுபட்டாா். கடைசியாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் சீனா மீதான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயா்த்தியது. அதைத் தொடா்ந்து, அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா 125 சதவீதம் வரி விதித்தது. பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அமெரிக்கா தனது வரியை 30 சதவீதமாகவும், சீனா தான் விதித்த வரியை 10 சதவீதமாகவும் குறைத்துக் கொண்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.