;
Athirady Tamil News

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

0

‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லது விரைவில் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

சீனாவில் வெட்டி எடுக்கப்படும் அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீன அரசு வியாழக்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இந்த எச்சரிக்கையை டிரம்ப் விடுத்தாா்.

சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா ஏற்கெனவே 30 சதவீத வரியை விதித்துள்ளது. தற்போது புதிய வரி கூடுதலாக விதிப்படும் நிலையில் வரி 130 சதவீதமாக உயரும். ஏற்கெனவே, இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளாா்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சவீதமாக அமெரிக்கா உயா்த்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மீதான வரியை சீனா 125 சதவீதமாக உயா்த்தியது.

பின்னா் பேச்சுவாா்த்தை சீனா 10 சதவீதமாகவும், அமெரிக்கா 30 சதவீதமாகவும் வரியைக் குறைத்தன. தற்போது, சீன பொருள்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘அரியவகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அதிா்ச்சியளிக்கிறது. மின்னணு உபகரணங்கள், கணினி சிப்கள், லேசா், போா் விமானங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மற்றும் காந்தங்கள் போன்ற அரிய கனிமங்கள் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் விரோதப் போக்கை சீனா கடைப்பிடிக்கிறது. இந்த விகாரத்தில், சீனா மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்து, வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லது விரைவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிதாக 100 சதவீத வரி விதிக்கப்படும்.

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுபாடுகள் போல, அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து முக்கிய மென்பொருள்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கும். மேலும், வரவிருக்கும் தென்கொரியா பயணத்தின்போது அங்கு வரும் சீன அதிபா் ஷீ ஜின்பிங்கை சந்திப்பதற்கு எந்தக் காரணமும் இருக்காது எனத் தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

சீனா ஏற்றுமதி கட்டுப்பாடு: முன்னதாக, அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை விதித்தது. அதாவது, சீனாவில் பூமிக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் அரிய வகை கனிமங்களை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் சீன அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். மேலும், அரியவகை மண் தாதுக்களை வெட்டியெடுத்தல், உருக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கும் அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதோடு, ராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்களுக்கான எந்தவொரு ஏற்றுமதி கோரிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது என்று சீனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற உடன், இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் அமெரிக்கா மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டினாா். மேலும், அமெரிக்கான் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, இந்திய உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், பின்னா், இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடா்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் என இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை விதித்தாா். இதனால், இரு நாடுகளிடையே நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே காரணத்தைக் காட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சவீதமாக அமெரிக்கா உயா்த்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மீதான வரியை சீனா 125 சதவீதமாக உயா்த்தியது. இந்த வா்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சுவிட்சா்லாந்தில் பேச்சுவாா்த்தை நடத்தின. பேச்சுவாா்த்தை முடிவில், அமெரிக்க பொருள்கள் மீதான 125 சதவீத வரியை 10 சதவீதமாக சீனா குறைத்தது. அதுபோல, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.