ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை
பரிதாபாத்: சகோதரிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானாவின் பரிதாபாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை சில மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அனைத்துச் சென்றனர். ஆனால் ராகுல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராகுலின் தந்தை மனோஜ் பாரதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், “யாரோ சிலர் என் மகனின் செல்போனை ஹேக் செய்து அதிலிருந்த என் 3 மகள்கள் மற்றும் ராகுலின் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் ராகுலும் என் மகள்களும் நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை உருவாக்கி உள்ளனர். இதை என் மகனிடம் காட்டி பணம் தராவிட்டால் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் கடந்த 2 வாரங்களாக ராகுல் விரக்தியுடன் இருந்தார். சரியாக சாப்பிடவில்லை” என கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சாஹில் மற்றும் நீரஜ் பார்தி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், ராகுலின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சாஹில் என்பவர் ராகுலுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி உள்ளார். அத்துடன் வாட்ஸ்-அப் உரையாடலை பரிசோதித்தபோது, ராகுல், தனது சகோதரிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஏஐ வீடியோக்களை அனுப்பி பணம் கேட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.