வயலில் வேலை செய்யும்போது 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்களை கண்டுபிடித்த தம்பதி
போலந்தில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு போலந்தின் Bukowiec Wielki என்ற சிறிய கிராமத்தில், ஒரு விவசாய தம்பதியினர் தங்கள் பண்ணை நிலத்தில் கற்கள் என்று நினைத்து அகற்றிய பொருட்கள், உண்மையில் 350 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் என தெரியவந்துள்ளது.
பீட்டா (Beata) மற்றும் ரோமுவால்ட் யோஸ்வியாக் (Romuald Jozwiak) என்ற தம்பதியினர், தங்கள் வயலில் வேலை செய்யும் போது இந்த நாணயங்களை கண்டுபிடித்தனர்.
பின்னர் அதிகாரிகள், மொத்தம் 162 வெள்ளி நாணயங்கள் 1660 முதல் 1679 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டவை என உறுதிப்படுத்தினர்.
ஆராய்ச்சியாளர்கள், நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த மண் பானையின் துண்டுகளையும் கண்டுபிடித்தனர். அத்துடன், செம்பு மோதிரம், மதச்சின்னம், பொத்தான்கள் மற்றும் black powder துப்பாக்கிக்கான ஈயக் குண்டுகள் ஆகியவைவும் மீட்கப்பட்டன.
இந்த நாணயங்களில், அன்றைய காலத்தில் சந்தையில் பரவலாக பயன்படுத்தப்பட்ட szóstak, ort, tymf போன்றவை அடங்கும். மேலும், இரண்டு taler நாணயங்கள் பெரிய பரிவர்த்தனைகளுக்காக சேமிக்கப்பட்டிருந்ததாக கருதப்படுகிறது.
வரலாற்று நிபுணர்கள், அந்த காலத்தில் போர், வரி சுமைகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக மக்கள் தங்கள் சேமிப்புகளை நிலத்தில் புதைத்து வைத்திருப்பது சாதாரணம் என விளக்குகின்றனர்.
ஆனால், பலர் மீண்டும் வந்து எடுக்க முடியாமல் போனதால், இத்தகைய புதையல் கண்டுபிடிப்புகள் இன்று வரலாற்று சான்றுகளாக மாறுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு, Działdowo நகரின் Museum of the Borderlands-இல் சுத்தம் செய்து பாதுகாக்கப்பட்ட பின், 2026 தொடக்கத்தில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.