புங்குடுதீவு டயானின் ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கை மாணவன் புங்குடுதீவு டயான் எழுதிய இரண்டாவது கவிதை நூலான ‘ஆழ் மனதின் மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(15) யாழ் பல்கலை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ர.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் கா. குகபாலன்,கௌரவ விருந்தினர்களாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் ,ஊடகக் கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்தினை புவியியற்றுறை மாணவி பா.சிந்தூரா இசைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவி லி.யஸ்மிகா வரவேற்பு நடனத்தை வழங்கியிருந்ததோடு , ஊடகக் கற்கைகள் துறை மாணவி மெ.புவஸ்ரினா வரவேற்புரையினை நிகழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ர.கஜேந்திரன் தலைமையுரையினை ஆற்றியிருந்ததோடு, ஆசியுரையினை கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் வழங்கியிருந்தார். மேலும் கௌரவ விருந்தினர் உரையினை ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நிகழ்த்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப வெற்றியாள உதயசீலன் கில்மிஷா மற்றும் நூலாசிரியர் புங்குடுதீவு டயான் ஆகியோர் இணைந்து பாடல் ஒன்றினைப் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து பாடகி கில்மிஷாவை நூலாசிரியர் டயான் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து நூலினை விருந்தினர்கள் வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியினை சிவா நறுமணப் பூங்கா உரிமையாளர் து.குருநாதசிவம் சார்பில் அவருடைய புதல்வர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையை எழுத்தாளர் வே.முல்லைத்தீபன் ஆற்றியிருந்தார்.
சிறப்பு விருந்தினர் உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் கா. குகபாலனும் , விஜய் பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.விஜய் நூலாசிரியர் நூலாசிரியர் டயான் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் யா/புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகளான லி.யஸ்மிகா, லி.லேஜா ஆகியோரின் நடன நிகழ்வோடு, இறுதியாக நூலாசிரியர் டயான் ஏற்புரையுடனான நன்றியுரையினை ஆற்றியிருந்ததுடன் எழுத்தாளர் பா.பிரியங்கன் சிறப்பான முறையில் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியிருந்ததோடு இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










