ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!
ஜப்பான் நாட்டின், அமோரி மாகாணத்தில் இன்று (டிச. 16) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஜப்பானில் உள்ள, அமோரி மாகாணத்தில் இன்று மதியம் 2.38 மணியளவில், 20 கி.மீ. ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், நல்வாய்ப்பாக உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பசிபிக் பெருங்கடலையொட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளும் இதுவரை விடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.8 ஆம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு விடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எச்சரிக்கை விலக்கப்படுவதாக, நேற்று நள்ளிரவு வானிலை அதிகாரிகள் அறிவித்தனர்.
முன்னதாக, அமோரி மாகாணத்தில் கடந்த டிச.12 ஆம் தேதி ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலையொட்டியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.