;
Athirady Tamil News

மகாமேளா: திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் புனித நீராடல்

0

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடங்கியது.

இந்த மகாமேளா பிப்ரவரி 15-ந்தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. இதில், ஜனவரி 15 (மகர சங்கராந்தி), ஜனவரி 18 (மவுனி அமாவாசை), ஜனவரி 23 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 1 (மகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 15 (மகா சிவராத்திரி) ஆகியவை புனித நீராடல் செய்வதற்கான முக்கிய நாட்கள் ஆகும்.

இதன்படி கடந்த 15-ந்தேதி மகர சங்கராந்தி அன்று, கங்கை நதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர். இந்த நிலையில், மவுனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

கடந்த ஆண்டு மவுனி ஆமாவாசையின்போது மகா கும்பமேளா நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். மேலும், அப்போது கூட்ட நெரிசல் சம்பவமும் அரங்கேறியது. இதனால், இந்த ஆண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.